முதுகலை ஆசிரியர்களுக்கானபணி நிரவல் கலந்தாய்வை ரத்து செய்ய வலியுறுத்தல்
- முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் மற்றும் உபரி முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களை பணி நிரவல் செய்தல் தொடர்பான செயல்முறைகளை வெளியிட்டுள்ளது.
- முதுகலை ஆசிரியர்களுக்கு பொதுமாறுதல் கலந்தாய்வு நடைபெறக்கூடிய நாளுக்கு முதல் நாள் பணி நிரவல் கலந்தாய்வு நடத்தப்பட்டு வருகிறது.
நாமக்கல்:
நேரடி நியமனம் பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர் நாமக்கல் ராமு தமிழக முதல்-அமைச்சருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:-
தமிழ்நாடு அரசு நகராட்சி மேல் நிலை பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் மற்றும் உபரி முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களை பணி நிரவல் செய்தல் தொடர்பான செயல்முறைகளை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வி துறையில் முதுகலை ஆசிரியர்களுக்கு பொதுமாறுதல் கலந்தாய்வு நடைபெறக்கூடிய நாளுக்கு முதல் நாள் பணி நிரவல் கலந்தாய்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் நடப்பாண்டில் வரும் மே அல்லது ஜூன் மாதத்தில் ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும். அதற்கு முதல் நாள் பணி நிரவல் கலந்தாய்வு நடத்த வேண்டும். அல்லது ஒரு கல்வியாண்டின் முதல் பள்ளி வேலை நாளைக்கு முந்தைய நாள் முதுகலை ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு நடத்த வேண்டும்.
அதனை விடுத்து தற்போது முதுகலை ஆசிரியர்களைப் பணி நிரவல் செய்வதை பள்ளிக்கல்வித்துறை தவிர்க்க வேண்டும். தற்போது பெரும்பாலான மாவட்டங்களில் 2-ம் இடைபருவத் தேர்வு நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து அரையாண்டு தேர்வு விரைவில் வர உள்ளது.
எனவே அதற்காக முழு பாடங்களையும் நடத்தி முடிப்பதற்கான கற்றல் கற்பித்தல் பணிகளிலும் மெல்ல கற்கும் மாணவர்களை தவிர்க்க தேர்ச்சி அடைய வைக்கும் முயற்சியிலும் அனைத்து முதுகலை ஆசிரியர்களும் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
மேலும் 11 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு 76 சதவீதம் பாடங்கள் நிறைவு பெற்று பொதுத் தேர்வு நடைபெற இன்னும் 3 மாதங்கள் உள்ள நிலையில் ஒவ்வொரு மாணவர்களையும் சரிவர புரிந்து அவர்களின் நிறை குறைகளை ஆராய்ந்து மேம்படுத்தி வரும் முதுகலை ஆசிரியர்களை மாணவர்களின் நலன் கருதி வரும் 20-ந் தேதி பணி நிரவல் செய்வதை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர் தெரிவித்துள்ளார்.