உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

திண்டுக்கல் அருகே கிராமங்களில் அதிகரிக்கும் மழைக்கால நோய்கள்மருத்துவ முகாம் அமைக்க வலியுறுத்தல்

Published On 2023-11-15 12:58 IST   |   Update On 2023-11-15 12:58:00 IST
  • ஏழை, எளிய மக்கள் திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிக்கு வந்து சிகிச்சை பெற அதிக பணம் செலவாகும் என்பதால் கிராமங்களிலேயே சிகிச்சை பெற்று வருகின்றனர்.
  • எனவே மருத்துவ அதிகாரிகள் கிராமங்களில் மருத்துவ முகாம்கள் அமைத்து பொதுமக்களுக்கு சிகிச்சை, ஆலோசனை வழங்க வேண்டும்.

திண்டுக்கல்:

திண்டுக்கல் அருகே ஏராளமான கிராமங்கள் உள்ளன. இங்கு பெரும்பாலும் விவசாயம் மற்றும் அதனை சார்ந்த கூலித்தொழிலாளர்களே அதிகம் உள்ளனர். இதனுடன் கால்நடைகளையும் வளர்த்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மழைக்கால நோய்களான சளி, இருமல், காய்ச்சல் ஆகியவை பொதுமக்களிடம் அதிகரித்து வருகிறது.

மேலும் நீண்ட நாட்கள் நீடிப்பதால் பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர். குறிப்பாக வடமதுரை, அய்யலூரை சுற்றி ஏராளமான மலைக்கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் காய்ச்சல், சளியால் பாதிக்கப்பட்டுள்ளனர். மழை காலத்தில் வேகமாக பரவும் காய்ச்சலால் பொதுமக்கள் பெரும் அவதியடைந்து வருகின்றனர்.

சில மலை கிராமங்களில் போதிய அளவு வசதிகள் இல்லை. அருகில் உள்ள ஊர்களுக்கு செல்லவும் போக்குவரத்து வசதி அதிக அளவு இல்லை. இதனால் பெரும்பாலான கிராம மக்கள் மெடிக்கல் ஷாப்பில் மருந்துகள் வாங்கி சுய மருத்துவம் பார்த்து வருகின்றனர். மேலும் மருத்துவம் படிக்காத சிலர் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

ஏழை, எளிய மக்கள் திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிக்கு வந்து சிகிச்சை பெற அதிக பணம் செலவாகும் என்பதால் கிராமங்களிலேயே சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் காய்ச்சல் பாதிப்பு குறையாமல் உள்ளது. எனவே மருத்துவ அதிகாரிகள் கிராமங்களில் மருத்துவ முகாம்கள் அமைத்து பொதுமக்களுக்கு சிகிச்சை, ஆலோசனை வழங்க வேண்டும். மேலும் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News