வாழப்பாடியில் மாயமான ஆட்டோ மீட்பு
- ராஜா (வயது 40). இவர் வாழப்பாடி நெடுஞ்சாலைத்துறை ஆய்வு மாளிகை அருகே தனது ஷேர் ஆட்டோவை நிறுத்தி வாடகைக்கு சென்று வந்தார்.
- வழக்கம் போல் ஆட்டோவை கொண்டு வந்து நிறுத்திய இவர், கடைவீதிக்கு சென்று விட்டு திரும்பி வந்து பார்த்தபோது ஆட்டோவை காணவில்லை.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி பேரூராட்சி அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா (வயது 40). இவர் வாழப்பாடி நெடுஞ்சாலைத்துறை ஆய்வு மாளிகை அருகே தனது ஷேர் ஆட்டோவை நிறுத்தி வாடகைக்கு சென்று வந்தார். இந்நிலையில், நேற்று காலை 11 மணியளவில். வழக்கம் போல் ஆட்டோவை கொண்டு வந்து நிறுத்திய இவர், கடைவீதிக்கு சென்று விட்டு திரும்பி வந்து பார்த்தபோது ஆட்டோவை காணவில்லை.
இதனால் பதறிப்போன இவர், பல இடங்களில் தேடியும் ஆட்டோவை கண்டுபிடிக்க முடியவில்லை. அருகிலுள்ள கடைகளில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிரா பதிவுகளை பார்த்ததில், மர்ம நபர் ஒருவர் ஆட்டோவை ஓட்டிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ராஜா கொடுத்த புகாரின் பேரில், ஆட்டோவை கடத்திச் சென்ற மர்மநபர் குறித்து வாழப்பாடி போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.
இதனிடையே மர்ம நபர், அந்த ஆட்டோவை உடையாப்பட்டி சாய்பாபா கோவில் அருகே உள்ள இணைப்பு சாலையில் நிறுத்தி விட்டு தப்பி சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், அங்கு விரைந்து சென்று ஆட்டோவை மீட்டனர். தப்பி ஓடிய மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.