உள்ளூர் செய்திகள்

தருமபுரி மாவட்டத்தில் 2 நாட்கள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சுற்றுப்பயணம் : தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் அறிக்கை

Published On 2023-09-24 16:35 IST   |   Update On 2023-09-24 16:35:00 IST
  • தரும்புரிக்கு 2 நாள் சுற்றுப்பயணம் செய்ய வரவுள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும் என அறிக்கை விடப்பட்டுள்ளது.
  • பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது்

தருமபுரி மாவட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

இது தொடர்பாக தருமபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தடங்கம் சுப்பிரமணி, தருமபுரி மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி. பழனியப்பன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

 கழக இளைஞர் அணி செயலாளரும், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தருமபுரி மாவட்டத்தில் நாளை (திங்கட்கிழமை) மற்றும் நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமை ஆகிய 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு நாளை (திங்கட்கிழமை) மாலை 5 மணிக்கு தருமபுரி மாவட்டம் வருகிறார். அவருக்கு மாவட்ட எல்லையான காரிமங்கலத்தில் மாவட்ட கழகம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் அருகில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்சி கொடியை ஏற்றி வைக்கிறார்.

இதைத்தொடர்ந்து நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு காரிமங்கலம்-தருமபுரி தேசிய நெடுஞ்சாலையில் நடைபெறும் ஒருங்கிணைந்த மாவட்ட தி.மு.க. இளைஞரணி செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார். இந்த கூட்டத்தை தொடர்ந்து பகல் 12 மணிக்கு தருமபுரி நகரில் கிருஷ்ணகிரி மெயின் ரோடு, புரோக்கர் ஆபீஸ் அருகில் 60 அடி உயர கம்பத்தில் கட்சிக் கொடியை அவர் ஏற்றி வைக்கிறார். இந்த நிகழ்ச்சிக்கு வரும் அவருக்கு மாவட்ட கழகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. தொடர்ந்து மாலையில் பென்னாகரம் மெயின் ரோட்டில் உள்ள ஜோதி மஹாலில் கழக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பொற்கிழி வழங்குகிறார்.

 அமைச்சர் பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக தருமபுரி மாவட்டத்திற்கு வருகை தரும் கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு அளிக்கப்படும் வரவேற்பு நிகழ்ச்சிகள் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளிலும் கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி, வார்டு, கிளை கழக நிர்வாகிகள், சார்பு அணிகளின் தலைவர்கள், துணை தலைவர்கள், அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், பெருந்தி ரளான இளைஞர்கள், கழகத் தொண்டர்கள் அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டுகிறோம்.இவ்வாறு அந்த அறிக்கை யில் கூறப்பட்டுள்ளது.

Similar News