உள்ளூர் செய்திகள்

நெற்பயிர்களை பாதுகாக்கும் வழிமுறைகள் - வேளாண் துறை விளக்கம்

Published On 2023-02-01 07:52 GMT   |   Update On 2023-02-01 07:52 GMT
  • இலைப் புள்ளியின் உட்புறத்தில் வெளிர் நிறத்தில் இருக்கும்.
  • வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தையோ தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்து உரிய விளக்கங்களை பெற்று பயன்பெறலாம்.

மடத்துக்குளம் :

மடத்துக்குளம் வட்டாரத்தில் நெற்பயிரில் குலை நோய் மற்றும் இலைப்புள்ளி நோய் தாக்குதலில் இருந்து பயிர்களை பாதுகாக்க வேளாண்மைத்துறையினர் வழிகாட்டல்கள் வழங்கி உள்ளனர். இதுகுறித்து மடத்துக்குளம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராஜேஸ்வரி கூறியதாவது:-

மடத்துக்குளம் வட்டாரத்தில் குறுவை மற்றும் சம்பா பருவத்தில் சுமார் 7,500 ஏக்கரில் நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் தற்போது சுமார் 2,500 ஏக்கர் பரப்பிலான நெற்பயிர் வளர்ச்சிப் பருவம், பூ பருவம், பால் பிடிக்கும் பருவம் மற்றும் அறுவடைக்குத் தயாரான நிலையில் உள்ளது. மடத்துக்குளம் வட்டாரத்தில் தற்சமயம் நிலவி வரும் காற்றின் அதிகப்படியான ஈரப்பதம் மற்றும் மூடுபனி காரணமாக நெற்பயிரைத் தாக்கும் பூஞ்சாண நோய்களான இலைப்புள்ளி நோய் மற்றும் குலை நோய் தாக்குவதற்கு சாதகமான சூழல் நிலவி வருகிறது. நெற்பயிரில் இலைகளில் ஆரஞ்சு நிறத்தில் புள்ளி கோள வடிவில் தோன்றி இலை முழுவதும் பரவி காணப்படுவது இலை புள்ளி நோய் தாக்குதலின் அறிகுறியாகும்.

இதனை தவிர்க்க நெல்லில் நோய் எதிர்ப்புத் திறன் கொண்ட ரகங்களான கோ 44, பவானி ரகங்களை சாகுபடி செய்தல் சிறந்தது. மேலும் அதிகப்படியான தழைச்சத்து இடுவதை தவிர்க்க வேண்டும். விதைகளை சூடோமோனாஸ் ப்ளோரசன்ஸ் கொண்டு விதை நேர்த்தி செய்து விதைத்தல் மற்றும் நெல் நடவு வயலில் தொழு உரத்துடன் 2 கிலோ கலந்து இடுதல் வேண்டும். மேலும் ரசாயன பூஞ்சாண கொல்லிகளான மேன்கோசெப் ப்ரொபினெப், கார்பென்டசிம் போன்றவற்றைத் தெளிப்பதன் மூலம் கட்டுப்படுத்தலாம். குலை நோய் நெல் இலைகளின் மேற்புறத்தில் குழல் வடிவிலான இலைப்புள்ளி தோன்றி கண் போன்று காட்சியளிக்கும். இலைப் புள்ளியின் உட்புறத்தில் வெளிர் நிறத்தில் இருக்கும். கணுப்பகுதியில் கருப்பு நிறத்தில் அழுகியது போன்று தோற்றமளிக்கும்.

குலைநோய் பாதித்த பயிர்களின் கதிர்கள் வெளிவருவது தடைப்படும். அதையும் தாண்டி வெளிவரும் கதிர்கள் பதர்களாக இருக்கும். குலை நோயிலிருந்து பயிர்களைப் பாதுகாக்க நோய் எதிர்ப்புத்திறன் கொண்ட ரகங்களான கோ 57,கோ 51,கோ 52,கோ 53,ஏடிடி 36,ஏடிடி 39,ஏஎஸ்டி 18 மற்றும் ஐஆர் 64 ரகங்களை சாகுபடி செய்யலாம். நெல்லில் அதிக தழைச்சத்து இடாமல் இருக்க வேண்டும். அத்துடன் நெல் வயலில் உள்ள களைகளை அகற்றி சுத்தமாக பராமரித்தல் மூலமாக குலை நோயைக் கட்டுப்படுத்தலாம். பூஞ்சாண நோய்களின் அறிகுறி தென்பட்டால் தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலர்களையோ அல்லது வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தையோ தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்து உரிய விளக்கங்களை பெற்று பயன்பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News