உள்ளூர் செய்திகள்

மஞ்சளாறு அணை முழு கொள்ளளவை எட்டியதால் உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.


தொடர் மழையால் முழு கொள்ளளவை எட்டிய மஞ்சளாறு அணை

Published On 2022-08-01 04:33 GMT   |   Update On 2022-08-01 04:33 GMT
  • மஞ்சளாறு அணை முழு கொள்ளளவான 57 அடியில் 56.20 அடியை எட்டியுள்ளது.
  • முழு கொள்ளளவை எட்டியதால் 3-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

தேவதானப்பட்டி:

கொடைக்கானல், பெருமாள் மலை, பூலத்தூர், சாமக்காடு, பாலமலை, அடுக்கம், பள்ளக்காடு ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

கடந்த மாதம் 45 அடியில் இருந்த மஞ்சளாறு அணை நீர் மட்டம் இப்பகுதியில் பெய்த மழையால் சீராக உயர்ந்து வருகிறது. கடந்த சில நாட்களாக பலத்தமழை பெய்து வருவதால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது. இதனால் அணையின் நீர் மட்டமும் வேகமாக உயர்ந்தது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு அணையின் நீர் மட்டம் 53.20 அடியை எட்டியதால் 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்து வருவதால் அணை முழு கொள்ளளவான 57 அடியில் 56.20 அடியை எட்டியுள்ளது. பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.

இதனால் தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள கெங்குவார்பட்டி, ஜி.கல்லுப்பட்டி, வத்தலக்குண்டு பகுதி மக்களுக்கு 3ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. யாரும் மஞ்சளாற்றை கடக்க வேண்டாம். ஆற்றில் இறங்கி குளிக்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ வேண்டாம் என பொதுப்பணித்துறையினர் எச்சரித்துள்ளனர்.

அணை நிரம்பியதால் விவசாய பணிகள் வேகமெடுத்துள்ளன. மேலும் குடிநீர் தட்டுப்பாட்டுக்கும் தீர்வு காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள மஞ்சளாறு அணைக்கு போதிய அளவு பஸ் வசதி இல்லை. மேலும் இதனை சுற்றுலா தலமாக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையாகும். வைகை அணையில் உள்ளது போல் சிறுவர் பூங்கா, விளையாட்டு உபகரணங்கள், செயற்கை நீரூற்றுகள் அமைத்து பராமரிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags:    

Similar News