அய்யனார்மேடு கிராமத்தில் இளம் பெண்ணை மானபங்கம் செய்ய முயன்றவர் சிறையில் அடைப்பு
- தப்பித்து வந்தபோது இளம்பெண்ணை வழிமறித்து நேதாஜி கொலை மிரட்டல் விடுத்தாராம்.
- சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து நேதாஜியை கைது செய்தனர்.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், சிறுவாபுரி என அழைக்கப்படும் சின்னம்பேடு ஊராட்சியைச் சேர்ந்த அய்யனார்மேடு பகுதியில் வசித்து வருபவர் வள்ளி தெய்வானை (வயது27). இவர் நேற்று மாலை இயற்கை உபாதையை கழிக்க அருகில் உள்ள சுடுகாடு பகுதிக்கு சென்றார்.
அப்பொழுது அய்யனார்மேடு பகுதியைச் சேர்ந்த பூ வியாபாரி நேதாஜி(வயது45) என்பவர் அங்கு சென்று இளம் பெண் வள்ளி தெய்வானையை தரக்குறைவான வார்த்தைகளால் பேசி கீழே தள்ளி மானபங்கம் செய்ய முயற்சி செய்தாராம். இளம்பெண் நேதாஜியை தள்ளிவிட்டு தப்பித்து வந்தாராம். அப்பொழுது இளம்பெண்ணை வழிமறித்து நேதாஜி கொலை மிரட்டல் விடுத்தாராம்.
இந்த சம்பவம் குறித்து ஆரணி காவல் நிலையத்தில் வள்ளி தெய்வானை நேற்று இரவு புகார் செய்தார். எனவே, ஆரணி காவல் நிலைய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து நேதாஜியை கைது செய்து காவல் நிலையம் கொண்டு வந்தனர். பின்னர், அவர் மீது வழக்கு பதிவு செய்து பொன்னேரி முதல் நிலை குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர் செய்து பொன்னேரி கிளை சிறையில் அடைத்தனர்.