உள்ளூர் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்.

பெண் தொழிலாளர்கள் போராட்டம்

Published On 2023-01-05 15:10 IST   |   Update On 2023-01-05 15:10:00 IST
  • திருமங்கலத்தில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்ட பெண் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  • இதைத்தொடர்ந்து அங்கு வந்த அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.

திருமங்கலம்

திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மறவன்குளம் பஞ்சாயத்து வையம்பட்டி கிராமத்தில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் மறவன்குளம் மற்றும் வையம்பட்டி கிராமத்தை சேர்ந்த 600-க்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இதில் வையம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பெண்கள் பணியாற்றி வருகின்றனர். வையம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பெண்களுக்கு ஆண்டிற்கு 15 முதல் 20 நாட்கள் மட்டுமே பணிகள் வழங்கப்படுவதாகவும், மேலும் 6 நாட்கள் வேலை பார்த்தால் 4 நாட்கள் மட்டுமே ஊதியம் வழங்கப்படுவதாகவும், இது பற்றி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தால் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில் இன்று திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை வையம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பெண்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அதிகாரிகள் இல்லாததால் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்கள் கூறும் போது, 100 நாள் வேலை திட்டத்தில் எங்களுக்கு வேலை வழங்கவில்லை எனவும், ஆண்டிற்கு 15 நாள் அல்லது 20 நாட்கள் மட்டுமே வேலை வழங்கப்படுவதாகவும் கூறினர்.

மேலும் வாரத்திற்கு 6 நாட்கள் வேலை பார்த்தால் 4 நாட்கள் மட்டுமே ஊதியம் வழங்கப்படுவதாகவும் ரூ.280 ஊதியத்திற்கு பதிலாக ரூ.200 மட்டுமே வழங்குவதாகவும் , மாவட்ட நிர்வாகம் தங்களுக்கு 100 நாள் வேலை வழங்க வேண்டும் என்றும் ஊதியம் முறையாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் அவர்கள் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து அங்கு வந்த அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.

Tags:    

Similar News