பரமத்திவேலூரில் அட்டகாசம் செய்த சிறுத்தை புலி இடம் மாறியது?
- தனியார் பள்ளி பின்புறம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுற்றித்திரிந்த சிறுத்தை புலி அப்பகுதியிலுள்ள கன்று குட்டி, ஆடு, கோழி, மயில்களை கடித்து கொன்றது.
- புலி நட மாட்டத்தை கண்காணிக்க 4 குழுக்களாகபிரிந்து தேடி வருகின்றனர். கடத்த 18 நாட்களாக தேடுயும், சிறுத்தை புலியை பிடிக்க முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் கபிலர்மலை அருகே வெள்ளாளபாளையம், ரங்கநாதபுரம், புளியம்பட்டி, சுண்டப்பனை, செஞ்சடையாம்பாளையம், பரமத்திவேலூர் தனியார் பள்ளி பின்புறம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுற்றித்திரிந்த சிறுத்தை புலி அப்பகுதியிலுள்ள கன்று குட்டி, ஆடு, கோழி, மயில்களை கடித்து கொன்றது. இதனை பிடிக்க மாவட்ட வனத்துறை அலுவலர் பெருமாள் தலைமையில் ட்ரோன் கேமரா, மோப்ப நாய் மூலம் தொடர்ந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சத்தியமங்கலம், ஈரோடு, முதுமலை, சேலம் பகுதியில் இருந்து வனத்துறையினர் வரவழைக்கப்பட்டு புலி நட மாட்டத்தை கண்காணிக்க 4 குழுக்களாகபிரிந்து தேடி வருகின்றனர். கடத்த 18 நாட்களாக தேடுயும், சிறுத்தை புலியை பிடிக்க முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர். இதனால் வனத்துறையினர் சோர்வடைந்து உள்ளனர்.
இது குறித்து வனத்துறை யினர் கூறியதாவது:-
பரமத்திவேலுார் பகுதிகளில் கால்நடை களை தொடர்ந்து வேட்டையாடி வரும் சிறுத்தை புலியை, பல்வேறு இடங்களில் தேடும் படலம் நீட்டிக்கப்பட்டது.
கடந்த 13-ந் தேதி நல்லூர் கந்தம்பாளையத்தை சேர்ந்த சண்முகம் என்பவருக்கு சொந்தமான ஆட்டை, சிறுத்தை புலி வேட்டையாடியது. இதற்குப் பிறகு சிறுத்தை புலி குறித்து எந்தவித தகவலும் கிடைக்கவில்லை.
கல்குவாரியில் எலும்புக்கூடுகள் அதிகஅள வில் கிடந்த இடத்தில் சிறுத்தை புலி பதுங்கி இருக்கும் என்று அங்கு சோதனை நடத்தினோம். ஆனால் அங்கும் சிறுத்தை புலி பிடிபடவில்லை. 2 நாட்களுக்கு ஒருமுறை கால்நடைகளை சிறுத்தை புலி வேட்டையாடி வந்தது. தற்போது 5 நாட்களுக்கு மேலாகியும் சிறுத்தை புலி எந்த கால்நடையையும் இதுவரை தாக்கவில்லை. மேலும் அதன் நடமாட்டம் குறித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் சிறுத்தை புலி இடம் மாறி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்நிலையில் கரூர் மாவட்டம் நொய்யல் அருகே அத்திப்பாளையம் பகுதியில் செந்தில் மற்றும் நாச்சிமுத்து ஆகிய விவசாயிகள் தோட்டத்தில் கட்டியிருந்த சுமார் 8-க்கும் மேற்பட்ட ஆடுகளை நேற்று முன்தினம் இரவு, மர்ம விலங்கு கடித்து கொன்றுள்ளது. இதனால் கரூர் மாவட்ட வனத்துறை யினர் அந்தப் பகுதிகளில் ஆய்வு செய்தபோது, சிறுத்தை புலியின் கால் தடம் பதிந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக பரமத்திவேலூர் சுற்று வட்டார பகுதியில் சுற்றிக் கொண்டிருந்த சிறுத்தை புலி, காவிரி ஆற்றில் இறங்கி நொய்யல் பகுதிக்கு சென்று அங்கிருந்து அத்திப்பாளையம் பகுதிக்கு சென்று இருக்க லாம் என்ற சந்தேகம் இருந்து வருகிறது. இருப்பினும் இன்னும் சில தினங்கள் இந்த பகுதியில் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.