உள்ளூர் செய்திகள்

கத்தியால் குத்தப்பட்ட மகேஸ்வரி.

திருமணமாகி 15 நாளில் கசந்த காதல்: மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கொல்ல முயன்ற கணவன் கைது

Published On 2022-11-15 15:30 IST   |   Update On 2022-11-15 15:30:00 IST
  • கடந்த சில நாட்களாக திருமூர்த்திக்கு மகேஸ்வரியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது.
  • சப்-இன்ஸ்பெக்டர் குமுதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி திருமூர்த்தியை கைது செய்தார்.

சூளகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி அருகே உள்ள சீபம் கிராமத்தைச் சேர்ந்தவர் திருமூர்த்தி (வயது 24). கூலித்தொழிலாளி. சூளகிரி அருகே அழகுபாவி கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி. இவரது மகள் மகேஸ்வரி (21). இவர்கள் 2 பேரும் கல்லூரியில் படிக்கும் போது பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

இதையடுத்து இருவீட்டு பெற்றோர்கள் சம்மதத்துடன் கடந்த 30.10.2022 அன்று இவர்களுக்கு திருமணம் நடந்தது. கடந்த சில நாட்களாக திருமூர்த்திக்கு மகேஸ்வரியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவர் அடிக்கடி மனைவியிடம் தகராறு செய்து வந்தார்.

இதேபோல நேற்று முன்தினம் அவர்கள் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரம் அடைந்த திருமூர்த்தி தான் வைத்திருந்த கத்தியால், புதுப்பெண் மகேஸ்வரியின் தலையின் பின்புறத்திலும், இடது கை பக்கமும் கத்தியால் குத்தியும், வெட்டியும் உள்ளார்.

இதில் படுகாயம் அடைந்த மகேஸ்வரியை குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து மகேஸ்வரி உத்தனப்பள்ளி போலீசில் புகார் செய்தார்.

அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமுதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி திருமூர்த்தியை கைது செய்தார். திருமணமான 15 நாளில் நடத்தையில் சந்தேகப்பட்டு புதுப்பெண்ணை கணவர் கத்தியால் குத்திய சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News