லைவ் அப்டேட்ஸ்: செஸ் ஒலிம்பியாட்... நேரு உள்விளையாட்டரங்கில் பிரமாண்ட தொடக்க விழா
இந்தியாவின் பாரம்பரிய நடனங்களை மேடையில் அரங்கேற்று வருகின்றனர். உத்தரப் பிரதேசத்தின் கதக், மணிப்பூரின் மணிப்பூரி, அசாமின் சத்ரியா, ஒடிஷாவின் ஒடிசி, ஆந்திராவின் குச்சிப்புடி, கேரளாவின் மோகினி ஆட்டம், கதகளி, தமிழகத்தின் பரதநாட்டியம் அரங்கேறி வருகின்றன.
தமிழகத்தில் இருந்து 186 அரசு பள்ளி மாணவர்கள் பன்னாட்டு வீரர்களை வழிநடத்திச் செல்கின்றனர். அரசு பள்ளி மாணவர்கள் தன்னம்பிக்கையை வளர்க்கும் விதமாக அணிவகுப்பில் பங்கேற்க வைக்கப்பட்டனர். மாவட்ட அளவில் அரசுப் பள்ளிகளில் நடைபெற்ற செஸ் போட்டிகளில் வெற்றிபெற்ற 186 மாணவர்கள் பங்கேற்பு.
செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்தடைந்தார். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தார் பிரதமர் மோடி.
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கும் 187 நாடுகளின் கொடி அணிவகுப்பு நடைபெற்று வருகிறது.
செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பட்டு வேட்டி, சட்டை அணிந்து பங்கேற்றார்.
செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து சென்னை புறப்பட்டார் பிரதமர் மோடி. மாலை 5.10 மணியளவில் சென்னை வரும் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பளிக்க பாஜக தொண்டர்கள் குவிந்துள்ளனர்.
தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரிய கட்டடத்தில் வரையப்பட்டுள்ள தம்பி குதிரை சின்னம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
மாமல்லபுரத்தில் இருந்து தொடக்க விழா நடைபெறும் நேரு உள் விளையாட்டரங்கிற்கு செஸ் விளையாட்டு வீரர்கள் வருகின்றனர். அவர்களுக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்படுகிறது. சென்னையில் 8 இடங்களில் தப்பாட்டம், ஒயிலாட்டம், பரதநாட்டியம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளுடன் வரவேற்பு அளிக்கப்படுகிறது.
வண்ண விளக்குகளால் நேரு உள் விளையாட்டு அரங்கம் அலங்கரிக்கப்பட்டுள்ளது. தொடக்க விழாவிற்காக சதுரங்க காய்களை கொண்டு பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பெருமைகளை பறைசாற்றும் வகையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரம், பூந்தேரி கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள போர்பாய்ண்ட்ஸ் ரிசார்ட் என்ற 5 நட்சத்திர தகுதி பெற்ற அரங்கில் நடைபெற உள்ளது. இதற்காக அங்கு பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இன்று முதல் அடுத்த மாதம் 10-ந் தேதி வரை இந்த போட்டிகள் நடைபெற உள்ளன. 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள், நடுவர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் இந்த போட்டியில் பங்கேற்க உள்ளனர்.
செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா இன்று மாலை 6 மணிக்கு சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது. பிரதமர் மோடி விழாவில் கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைக்க உள்ளார்.