நில புரோக்கரை காரில்கடத்தியவர் சிக்கினார்
- இவர்களுக்குள் பணம் கொடுக்கல் வாங்கல், நிலம் விற்பது தொடர்பாகவும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது
- நேற்று முன்தினம், வரட்டனப்பள்ளி அருகே சக்திவேல், சங்கர் உள்ளிட்டோர் கடத்தி சென்றது தெரிந்தது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், கந்திக்குப்பம் அடுத்த பாலேப்பள்ளியை சேர்ந்தவர் பாபு (வயது63), நில புரோக்கர். இவர், நேற்று முன்தினம் காலை, 8.30 மணியளவில் பாலேப்பள்ளியில் இருந்து வரட்டனப்பள்ளிக்கு பைக்கில் சென்ற போது, இன்னோவா காரில் வந்த மர்ம நபர்கள் கடத்திச் சென்றனர்.
இதுகுறித்து பாபுவின் மனைவி ராஜேஸ்வரி கந்திகுப்பம் போலீசில் புகார் அளித்தார். அதில், சங்கர், சக்திவேல் உள்ளிட்டோர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார். அதன்படி பாபுவை காரில் கடத்திய சக்திவேல், என்பவரை கந்திக்குப்பம் போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், வானூர் அடுத்த ஒழிந்தியாப்பட்டு பகுதியை சேர்ந்த சக்திவேல், சங்கர் ஆகியோர், கடத்தப்பட்ட பாபுவுடன் நண்பர்களாக இருந்துள்ளனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் பாபு, சக்திவேலிடம், 28 லட்ச ரூபாய் கடனாக பெற்றுள்ளார்.
பணத்தை திருப்பி தரவில்லை. மேலும் இவர்களுக்குள் பணம் கொடுக்கல் வாங்கல், நிலம் விற்பது தொடர்பாகவும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. மேலும் பாபுவுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் விபத்து ஏற்பட்டதால் வெளியில் செல்லாமல் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம், வரட்டனப்பள்ளி அருகே சக்திவேல், சங்கர் உள்ளிட்டோர் கடத்தி சென்றது தெரிந்தது.
இச்சம்பவம் குறித்துகந்திக்குப்பம் போலீசார், திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்ட போலீசுக்கு தகவல் கொடுத்ததையடுத்து விழுப்புரம் அருகே சென்ற சக்திவேலை போலீசார் மடக்கி பிடித்தனர். சக்திவேலை கைது செய்த கந்திக்குப்பம் போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.