உள்ளூர் செய்திகள்

சாலை வசதி இல்லாததால் அடிப்படை தேவைகளுக்கு பாதிப்பு: கிருஷ்ணகிரி அருகே ஊரையே காலி செய்த மலைக்கிராம மக்கள்

Published On 2022-09-16 14:47 IST   |   Update On 2022-09-16 14:47:00 IST
  • மாதேஸ்வரன் கோவையிலிருந்து அருள்நாதபுரம் சென்றால்தான் இந்த கிராம மக்கள் சாலையை பார்க்க முடியும்.
  • பிழைப்புக்காக வெளியூர்களில் மக்கள் தஞ்சம்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகேயுள்ள மடக்கால் பஞ்சாயத்துக்கு உள்பட்டது மாதேஸ்வரன் கோவை மலைப்பகுதி.

சுமார் 40 பேருக்கு மேல் குடும்பங்களாக வசித்து வந்த இந்த கிராமத்தில் தற்போது காலியாக உள்ள வீடுகளையும், விளைச்சல் நிலங்களில் புல்பூண்டுகள் முளைத்துள்ளதையும் மட்டுமே காணமுடிகிறது.

மருத்துவ வசதி, உயர்கல்வி உள்பட அடிப்படை தேவைகள் அனைத்திற்கும் இந்த கிராமத்திலிருந்து வெளியே செல்ல ஒழுங்கான சாலை வசதி இல்லாமல் போனதே இதற்கு முழு காரணமாக கூறப்படுகிறது.

மாதேஸ்வரன் கோவையிலிருந்து அருள்நாதபுரம் சென்றால்தான் இந்த கிராம மக்கள் சாலையை பார்க்க முடியும்.

இதையடுத்து இந்த மலை கிராமத்தில் வசித்து வந்த மக்கள் ஜவளகிரி ,அஞ்செட்டி, மிலிடிக்கை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து விட்டனர்.

மேலும் பலர் பிழைப்புக்காக கர்நாடக மாநிலத்துக்கும், சிலர் வெளி மாவட்டங்களுக்கும் சென்று விட்டதாக அவர்களது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

சொந்த வீடுகள், விவசாய நிலங்களை விட்டுவிட்டு வெளியூர்களுக்கு சென்று வாடகை வீட்டில் வசிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த மலை கிராமத்திற்கு சாலை வசதி ஏற்படுத்த வட்டார வளர்ச்சி அலுவலர்,பஞ்சாயத்து நிர்வாகம் என்று பல இடங்களில் கோரிக்கைகள் விடுக்கப்பட்டும் எவ்வித பலனும் இன்றி மக்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.தற்போது மாவட்ட கலெக்டர் கவனத்திற்கு இந்த விவகாரம் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

தீர்வு கிடைக்குமா? என்று காத்திருக்கின்றனர் மாதேஸ்வரன் கோவை மக்கள்.

Tags:    

Similar News