உள்ளூர் செய்திகள்

கும்பாபிஷேகத்தில் ஆதீனங்கள் கலந்து கொண்டு தரிசித்தனர்.

குமரக்கட்டளை சுப்பிரமணியசாமி கோவில் கும்பாபிஷேகம்- ஆதீனங்கள் பங்கேற்பு

Published On 2023-03-27 08:30 GMT   |   Update On 2023-03-27 08:30 GMT
  • புனிதநீர் அடங்கிய கடங்களை தலையில் சுமந்து விமானத்தில் உள்ள கலசத்திற்கு வந்தடைந்தனர்.
  • கோபுர விமானத்தில் உள்ள கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.

தரங்கம்பாடி:

மயிலாடுதுறை மாயூரநாதர் பெரிய கோயிலில் தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான குமரக்கட்டளை உள்ளது.

இங்குள்ள சுப்பிரமணியர் சுவாமி சன்னதியில் திருப்பணிகள் நிறைவுற்று கடந்த 19-ஆம் தேதி எஜமான அனுக்ஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது.

ஆறுகால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.

பின்னர் நடைபெற்ற 6-ஆம் கால யாகசாலை பூஜை நிறைவில், மகா பூர்ணாகுதி செய்து மகா தீபாராதனை காட்டப்பட்டது.

பின்னர் பாலச்சந்தர் சிவாச்சாரியர், திருக்கடையூர் மகேஷ் குருக்கள் உள்ளிட்ட சிவாச்சாரியார்கள் புனிதநீர் அடங்கிய கடங்களை தலையில் சுமந்து விமானத்தில் உள்ள கலசத்திற்கு வந்தடைந்தனர்.

அப்போது கருடன் வட்டமிட, வேத விற்பன்னர்கள் சிவ ஆகமங்கள் முறைப்படி மந்திரங்கள் ஓத, பக்தர்கள் முருகா முருகா என கோஷங்கள் எழுப்ப, மேளதாளங்கள் முழங்க தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக சுவாமிகள்,

வேளாக்குறிச்சி ஆதீனம் சத்தியஞான மகாதேவ தேசிக பரமாசாரிய சுவாமிகள், சூரியனார்கோயில் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாசாரிய சுவாமிகள், திருப்பனந்தாள் ஆதீன இளவரசு ஸ்ரீமத் சபாபதி தம்பிரான் சுவாமிகள், திருவாவடுதுறை ஆதீனக்கட்டளை ஸ்ரீமத் வேலப்ப தம்பிரான் சுவாமிகள் மற்றும் தருமபுரம் ஆதீனக் கட்டளைத் தம்பிரான்கள் முன்னிலையில் விமானத்தில் உள்ள கலசத்தில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.

இதனை தொடர்ந்து கருவறையில் உள்ள வள்ளி தெய்வானை உடனாகிய சுப்பிரமணியருக்கு புனித நீரை ஊற்றி மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் திருவாவடுதுறை ஆதீனம் மேலாளர் சண்முகம், ஆதீனம் கண்காணிப்பாளர் குருமூர்த்தி, மாயூரநாதர் பெரிய கோயில் காசாளர் வெங்கடேசன், நகரமன்ற தலைவர் செல்வராஜ், தருமபுரம் கல்லூரிச் செயலர் செல்வநாயகம், கல்லூரி முதல்வர் சுவாமிநாதன் என ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News