உள்ளூர் செய்திகள்

தென்காசி கடத்தல் வழக்கு- குருத்திகா உறவினர்களின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

Published On 2023-04-05 13:14 IST   |   Update On 2023-04-05 13:14:00 IST
  • குருத்திகாவின் உறவினர் மற்றும் பெற்றோர்கள் என 12 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
  • அரசு தரப்பில் ஏற்கனவே முன்ஜாமீன் கோரிய வழக்கில் மனுதாரர்கள் போலீஸ் நிலையத்தில் சரணடைய உத்தரவிடப்பட்டது.

மதுரை:

தென்காசியில் காதல் திருமணம் செய்த இளம்பெண் குருத்திகா பட்டேலை அவரது குடும்பத்தினர் கடத்தியதாக காதலன் மாரியப்பன் வினித் தென்காசி மற்றும் குற்றாலம் போலீஸ் நிலையங்களில் புகார் செய்தார்.

அதன் பேரில் குருத்திகாவின் உறவினர் மற்றும் பெற்றோர்கள் என 12 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து தங்களுக்கு ஜாமீன் மற்றும் முன்ஜாமீன் வழங்கக்கோரி மதுரை ஐகோர்ட்டில் அவர்கள் மனு தாக்கல் செய்தனர்.

அப்போது ஜாமீன் கோரியவர்களுக்கு ஜாமீன் வழங்கியும், முன்ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்தும் மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

இந்த நிலையில் குருத்திகா பட்டேலின் உறவினர்களான விஷால், கீர்த்தி பட்டேல் மற்றும் சண்முகராஜ் ஆகியோர் தங்களுக்கு முன் ஜாமீன் கோரி மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனு நீதிபதி இளந்திரையன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அரசு தரப்பில் ஏற்கனவே முன்ஜாமீன் கோரிய வழக்கில் மனுதாரர்கள் போலீஸ் நிலையத்தில் சரணடைய உத்தரவிடப்பட்டது. ஆனால் மனுதாரர்கள் சரணடையவில்லை. மேலும் விசாரணை நடைபெற்று வருவதால் முன்ஜாமீன் வழங்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து நீதிபதி, மனுதாரர் தரப்பில் முந்தைய முன்ஜாமீன் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது குறித்து தகவல் தெரிவிக்கவில்லை. மேலும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதை பதிவு செய்து கொண்டு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Tags:    

Similar News