உள்ளூர் செய்திகள்

விளைநிலத்தில் வெள்ளம் சூழ்ந்ததால் தண்ணீரை அகற்றும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளதை படத்தில் காணலாம்.

முழு கொள்ளளவை எட்டிய கே.ஆர்.பி.அணை: உபரி நீர் வெளியேற்றத்தால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு -ராயல் ஏரிக்கரை உடைந்து 250 ஏக்கர் நெற்பயிர்கள் மூழ்கின

Published On 2022-11-14 09:47 GMT   |   Update On 2022-11-14 09:47 GMT
  • இன்றுகாலை 6 மணி நிலவரப்படி நீர்வரத்து 964 கனஅடியாக அதிகரித்தது.
  • வருவாய்த்துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டத் தில் தென்பெண்ணை ஆற்று நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால், கெலவரப்பள்ளி, கிருஷ்ண கிரி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதன்படி, கெலவரப்பள்ளி அணைக்கு இன்றுகாலை 6 மணி நிலவரப்படி நீர்வரத்து 964 கனஅடியாக அதிகரித்தது.

இதனால் அணையில் இருந்து வினாடிக்கு 908 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீரும், சூளகிரி, சின்னாறு அணை நீர்பிடிப்பு பகுதிகளிலும், மார்க்கண்டேய நதி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் பெய்த தொடர் மழையால் கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது.

அதன்படி இன்றுகாலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 2,407 கனஅடியாக அதிகரித்தது. பின்னர் படிப்படியாக நீர்வரத்து உயர்ந்ததால் அணை முழு கொள்ளளவை எட்டியது.

இதனால் அணையில் இருந்து மதகுகள் வழியாக 1,919 கனஅடி உபரிநீர் திறந்து விடப்படுகிறது. இதனால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கரையோரம் வசிக்கும் மக்களுக்கு பொதுப்பணி, வருவாய்த்துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதேபோல சின்னாறு அணைக்கு வினாடிக்கு 18 கனஅடியாக இருந்த நீர்வரத்து காலை வினாடிக்கு 284 கனஅடியாக அதிகரித்தது. அணையில் முழு கொள்ளளவிற்கு தண்ணீர் உள்ளதால், உபரி நீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது.

இதேபோல் பாம்பாறு அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 824 கனஅடியாக அதிகரித்தது. இந்த அணையின் மொத்த கொள்ளளவை நீர்மட்டம் எட்டி வருகிறது.

தொடர் மழை காரணமாக கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை,சின்னாறு மற்றும் பாம்பாறு அணை ஆகியவற்றின் உபரி நீர் முழுவதுமாக திறந்து விடப்படுவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் அஞ்சூர் ஊராட்சிக்கு உட்பட்ட மோடிகுப்பம் கிராமத்தில் 25 ஏக்கர் பரப்பளவில் ராயல் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மூலம் அந்த பகுதியில் உள்ள 500 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் ஆழ்துளை கிணறுகள், விவசாய கிணறுகளுக்கு நீர் ஆதாரமாகவும், இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையும் பூர்த்தி செய்கிறது. இந்த நிலையில் பரவலாக பெய்த மழையால், ராயல் ஏரிக்கு தண்ணீர் அதிகரித்து வந்தது.

மோடிகுப்பம் சுற்று வட்டார பகுதியில் கன மழை கொட்டி தீர்த்ததால் ஏரி நிரம்பியது. இதனால் ஏரியின் கரைகள் உடைந்து தண்ணீர் நெல்வயல்களில் புகுந்தது. இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த 250 ஏக்கர்நெற்பயிர்கள் சேதமானது.

Tags:    

Similar News