உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி அரசு பள்ளியில் கோடை மகிழ்ச்சி கொண்டாட்ட நிறைவு விழா

Published On 2023-05-20 10:01 GMT   |   Update On 2023-05-20 10:01 GMT
  • மலர் வளர்ப்பு, கலை, கைவினை, இசை, நாடகம் உள்ளிட்ட செயல்பாடுகளில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
  • மாவட்ட விளையாட்டு அலுவலர் மகேஷ்குமார் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், கோடை மகிழ்ச்சி கொண்டாட்ட சிறப்பு முகாமை, மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் கடந்த 15-ந் தேதி தொடங்கி வைத்தார்.

5 நாட்கள் நடந்த இந்த பயிற்சி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி, மாவட்டக் கல்வி அலுவலர் மணிமேகலை ஆகியோரின் மேற்பார்வையில் நடந்தது.

இந்த பயிற்சி முகாமில், குகைக் கலை, பாறை ஓவியம், மலையேற்றம், மாதிரி அகழ்வாராய்ச்சி, தொழிற்துறை வெளிப்பாடு, மலர் வளர்ப்பு, கலை, கைவினை, இசை, நாடகம் உள்ளிட்ட செயல்பாடுகளில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடந்த முகாம் நிறைவு விழாவில், மாணவ, மாணவிகள் படைப்பாற்றலுடன் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி புகைப்படம் எடுத்துக் கொண்டார். தலைமை ஆசிரியர் மகேந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

இம்முகாமின் ஒரு பகுதியாக, கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கு மற்றும் ஓசூர் அந்திவாடி விளையாட்டு மைதானத்திலும், அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டு பயிற்சி முகாம், 5 நாட்கள் நடந்தது. பயிற்சி முகாமை கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் துரையும், ஓசூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில், மாவட்டக் கல்வி அலுவலர் கோவிந்தன் ஆகியோர் துவக்கி வைத்தனர். மாவட்ட விளையாட்டு அலுவலர் மகேஷ்குமார் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.

இப்பயிற்சி முகாமில், தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, கையுந்துப்பந்து மற்றும் ஜூடோ விளையாட்டுப் போட்டிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டன. இதில், 120 மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். இவர்களுக்கு, மாவட்ட விளையாட்டு அரங்க பயிற்சியாளர்கள், அரசு பள்ளி உடற்கல்வி இயக்குனர் சிதம்பரம், உடற்கல்வி ஆசிரியர் ராகவன், சுரேஷ் பாபு, சுப்பு, முருகன், சீனிவாசன் மற்றும் சந்துரு ஆகியோர் பயிற்சியை அளித்தனர். உடற்கல்வி இயக்குனர் மாதேஸ், உடற்கல்வி ஆசிரியர்கள் பவுன்ராஜ் மற்றும் சத்தியநாதன் ஆகியோர் விளையாட்டு பயிற்சி முகாம் ஒருங்கிணைப்பாளர்களாக செயல்பட்டனர்.

Tags:    

Similar News