35 நாட்களாக செயற்கை சுவாசம் மூலம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு உயிர் பிழைத்த சபீராவுடன், கிருஷ்ணகிரி அரசு மகப்பேறு மருத்துவமனை மருத்துவ குழுவினரை படத்தில் காணலாம்.
35 நாட்களுக்கு செயற்கை சுவாசம்: கர்ப்பிணியை காப்பாற்றிய கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை டாக்டர்கள்
- கிருஷ்ணகிரியில் இதயம் செயலிழந்த கர்ப்பிணி பெண்ணை அரசு டாக்டர்கள் காப்பற்றினார்கள்.
- 35 நாட்கள் செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டது.
இதயம் செயலிழந்த நிலையில், ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு, 35 நாட்கள் செயற்கை சுவாசம், சிகிச்சைகள் அளித்து கிருஷ்ணகிரி அரசு மகப்பேறு மருத்துவமனை மருத்து வர்கள் காப்பாற்றினார்கள்.
இது குறித்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் பூவதி கூறியதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டம், தளி ஒன்றியம் தேவகானப்பள்ளியை சேர்ந்தவர் சபீரா (வயது 26). கர்ப்பிணியான இவருக்கு கர்ப்பகால வலிப்பு நோயுடன், உயர் ரத்த அழுத்தம், ரத்தசோகையும் இருந்துள்ளது. ஓசூர் அரசு தலைமை மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்ற இவருக்கு கடந்த ஜூலை, 9-ந் தேதி உடல்நிலை மோசமானது.
இதையடுத்து உயர் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி காந்திசாலையில் உள்ள அரசு மகப்பேறு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அன்று, அதிகாலை, 3 மணியளவில் அவருக்கு சுயநினைவே இல்லை. இதய செயலிழப்பும் ஏற்பட்டது. உடனடியாக உயிர் காக்கும் முதலுதவியுடன் செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டது.
அறுவை சிகிச்சை மூலம் காலை, 6.30 மணிக்கு, 30 வார வளர்ச்சியுடன், 750 கிராம் எடையுடன் இறந்த நிலையில் குழந்தையை அறுவை சிகிச்சை மூலம் எடுத்தனர். சபீராவுக்கு தொடர் செயற்கை சுவாசம் தேவைப்பட்டதால், டிரக்கியாஸ்டமியும் செய்யப்பட்டது. தொடர்ந்து, 35 நாட்களுக்கு எந்த அசைவும் இல்லாமல் இருந்த அவர், அதன் பின் முன்னேற்றமடைந்து சுவாசிக்க தொடங்கி, தற்போது நலமுடன் உள்ளார்.
அதேபோல காவேரிப்பட்டணத்தை சேர்ந்த சோனியா (25) என்ற கர்ப்பிணி பெண்ணுக்கு அதிக ரத்தப்போக்கால் உயிருக்கு ஆபத்தான நிலையில் சேர்க்கப்பட்டார். அவருக்கும், 55 யூனிட் ரத்த மூலக்கூறுகள் செலுத்தப்பட்டு, செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. இருநாட்களில் உடல்நலம் சீராகி, கடந்த, 3-ந் தேதி சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. இவ்வாறு அவர் கூறினார்.
செயற்கை சுவாசத்துடன், 35 நாட்கள் சிகிச்சை பெற்றவரை கண்காணிக்க மருத்துக்கல்லூரி முதல்வர் பூவதி தலைமையில், உள்ளிருப்பு மருத்துவ அலுவலர் டாக்டர் செல்வி மற்றும் வசந்தகுமார், சிவமஞ்சு, உதயராணி, நவீனாஸ்ரீ, முத்தமிழ், இளம்பரிதி, மஞ்சித் ஆகிய டாக்டர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு கர்ப்பிணி பெண்ணை உரிய சிகிச்சைகள் மூலம் காப்பாற்றியது குறிப்பிடத்தக்கது.