கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ.வுக்கு வரவேற்பு -அவைத்தலைவர் தட்ரஅள்ளி நாகராஜ் தலைமையில் ஏற்பாடு
- தட்ரஅள்ளி நாகராஜ் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
- அண்ணா சிலைகளுக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ. மாலை அணிவித்தார்.
கிருஷ்ணகிரி,
தி.மு.க.,வின், 15வது உட்கட்சி தேர்தல் முடிந்து கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளராக, மாநில தி.மு.க. விவசாய அணி துணை தலைவரும், பர்கூர் எம்.எல்.ஏ.,வுமான மதியழகன் தேர்வானார்.
சென்னையில் இருந்து கிருஷ்ணகிரி வந்த அவருக்கு மாவட்ட எல்லையான பர்கூர் அடுத்த ஒப்பதவாடியில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. அவைத் தலைவர் தட்ரஅள்ளி நாகராஜ் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மேளதாளங்கள் முழங்கவும், ஆளுயர மாலை அணிவித்தும் அவருக்கு கட்சியினர் வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து பர்கூர் வட்டார வளர்ச்சி அலுவலகம், கிருஷ்ணகிரி, 5 ரோடு ரவுண்டானா அருகே உள்ள அண்ணா சிலைகளுக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ. மாலை அணிவித்தார்.
தொடர்ந்து பெங்களூரு சாலை வழியாக திறந்த ஜீப்பில் ஊர்வலமாக வந்து பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ. அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முன்னதாக வழிநெடுகிலும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய, நகர, பேரூர், நிர்வாகிகள் மற்றும் ஆயிரக்கணக்கான தி.மு.க. தொண்டர்கள் கலந்து கொண்டனர்.