கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முள்ளங்கி விலை கடும் வீழ்ச்சி -விவசாயிகள் கவலை
- முள்ளங்கி, புதினா, கொத்தமல்லி ஆகியவற்றை விவசாயிகள் அதிகளவில் சாகுபடி செய்கின்றனர்.
- முள்ளங்கிகளை பறிக்காமல், டிராக்டர்கள் மூலம் அழித்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக காய்கறிகள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. கேரட், பீன்ஸ், தக்காளி, முட்டைகோல், கத்தரிக்காய், முள்ளங்கி, புதினா, கொத்தமல்லி ஆகியவற்றை விவசாயிகள் அதிகளவில் சாகுபடி செய்கின்றனர்.
கிருஷ்ணகிரியில், ராயக்கோட்டை சாலையில் தின்னக்கழனி, பூதிபட்டி பகுதிகளில் அதிகளவில் விவசாயிகள் முள்ளங்கி சாகுபடி செய்துள்ளனர். இதற்கு போதிய விலை கிடைக்காத காரணத்தால், நிலத்திலேய அழுகிய முள்ளங்கிகளை பறிக்காமல், டிராக்டர்கள் மூலம் அழித்து வருகின்றனர்.
இதுகுறித்து, பூதிபட்டியை சேர்ந்த விவசாயி மணி, 48 கூறுகையில், நான் ஒரு ஏக்கர் பரப்பில் முள்ளங்கி பயிரிட்டேன். இதற்காக, 35 ஆயிரம் ரூபாய் செலவிட்டேன்;
35 நாட்களில் அறுவடை செய்யலாம் என்ற நம்பிக்கையில் முள்ளங்கி சாகுபடியில் ஈடுபட்டேன். முள்ளங்கி விளைச்சல் இருந்தும் அதற்கு போதிய விலை இல்லாததால், சில நாட்கள் பொறுத்து அறுவடை செய்யலாம் என நினைத்தபோது தொடர் மழை பெய்ததாலும், முள்ளங்கி விலை கிலோ, 5 ரூபாய்க்கு கீழ் குறைந்ததாலும் விற்கமுடியவில்லை. இந்நிலையில் நிலங்களிலேயே அழுகிய முள்ளங்கிகளை டிராக்டர் மூலம் அகற்றி நிலத்தை உழுது வருகிறோம் என கவலையுடன் கூறினார்.