குலசேகரம் அருகே பாரம் ஏற்றி சென்ற லாரியில் இருந்து ஓட்டை வழியாக ரோட்டில் சிதறிய ஜல்லிகள் பொதுமக்கள் மடக்கி பிடித்ததால் பரபரப்பு
- குமரி மாவட்டம் சித்திரங்கோட்டில் சுமார் 10-க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் செயல்பட்டு வருகிறது.
- கல், எம்.சான்ட், என்.சான்ட், ஜல்லி ஆகியவை ஏற்றிக்கொண்டு கேரளாவுக்கு செல்கிறது
நாகர்கோவில்: குமரி மாவட்டம் சித்திரங்கோட்டில் சுமார் 10-க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து தினமும் பகல், இரவு நேரங்களில் சுமார் 500-க்கும் மேற்பட்ட கனரக வாகனங்களில் கல், எம்.சான்ட், என்.சான்ட், ஜல்லி ஆகியவை ஏற்றிக்கொண்டு கேரளாவுக்கு செல்கிறது. கனிம வளங்களை பெரிய எந்திரம் மூலம் உடைத்து பெரிய டாரஸ் லாரிகளில் ஏற்றி செல்கிறார்கள். இந்த வாகனங்கள் அனைத்தும் பாதுகாப்பற்ற முறையில் அதிவேகமாக செல்கிறது. இதனால் ரோடுகள் வெகு விரைவில் பழுதடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. மேலும் அதிக விபத்துக்களும் நடைபெறுகிறது. சித்திரங்கோட்டில் இருந்து செல்லும் டாரஸ் லாரிகள் அண்டூர், வெண்டலிகோடு, மாமூடு, காவஸ்தலம் வழியாக சென்று வருகிறது. மாலை வேளைகளில் அதிவேகமாக செல்வதால் அதிக அளவில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இந்த வாகனங்களில் ஜல்லி கொண்டு செல்லும்போது மேல் பகுதி முழுவதும் தார்ப்பாய் போட்டு மூடி தான் செல்ல வேண்டும் என்று விதிமுறை உள்ளது. ஆனால் எந்த வாகனமும் இதை பின்பற்றுவது இல்லை.
நேற்று இரவு 8 மணி அளவில் சித்திரங்கோட்டில் இருந்து டாரஸ் லாரியில் ஜல்லி ஏற்றி சென்று கொண்டு இருந்தது. அதன் மேற்பகுதி தார்ப்பாய் வைத்து மூடவில்லை. லாரியின் பின் பக்கம் போரில் சிறிய அளவு ஓட்டை இருந்து இருக்கிறது. லாரி வெண்டலிகோடு தாண்டி செல்லும்போது வண்டியில் இருந்து ஜல்லி ஓட்டை வழியாக ரோட்டில் கொட்டியது. சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு லாரியில் இருந்து ஜல்லி கற்கள் ரோட்டில் சிதறி விழுந்தது. லாரியின் பின்னால் இரு சக்கர வாகனத்தில் சென்றவர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தனர். இதனை அறிந்த மாமூடு பகுதியில் லாரி வரும்போது அந்த பகுதி பொதுமக்கள் லாரியை மடக்கி பிடித்தார்கள். பின்னால் வந்த கனரக வாகனங்களையும் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தி னார்கள். இதனால் பொது மக்களுக்கும், லாரி டிரை வருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே தகவல் அறிந்து குலசேகரம் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்து டாரஸ் லாரியை அனுப்பி வைத்தனர். இதனால் போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ரோட்டில் சிதறி கிடைக்கும் ஜல்லியை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். லாரியை போலீசார் போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.