உள்ளூர் செய்திகள்

குமரி மாவட்டத்தில் லாரிகளில் இருந்து மதுபானங்களை இறக்காமல் தொழிலாளர்கள் போராட்டம்

Published On 2023-05-08 14:34 IST   |   Update On 2023-05-08 14:34:00 IST
  • சுமார் 30 லாரிகள் மது பாட்டில்களை ஏற்றி வந்தன.
  • டாஸ்மாக் கடைகளுக்கு கொண்டு செல்வதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது

கன்னியாகுமரி :

கன்னியாகுமரி மாவட்டத்தில் மதுபான குடோன் செண்பகராமன் புதூர் பகுதியில் உள்ளது. இந்த குடோனுக்கு பல்வேறு மதுபான கம்பெனிகளில் இருந்து சுமார் 30 லாரிகள் மது பாட்டில்களை ஏற்றி வந்தன. ஆனால் அவற்றை இறக்க முடியாமல் அனைத்து லாரிகளும் குடோன் முன்பு நிறுத்தப்பட்டுள்ளன.

மது பானங்களை லாரிகளில் இருந்து இறக்கும் சுமை தூக்கும் தொழிலாளர்களில் 44 பேர், சி.ஐ.டி.யூ. பணியாளர்களாக உள்ளனர். அவர்கள் தற்போது கூடுதல் இறக்க கூலி கேட்டு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மாவட்ட பொருளாளர் முருகன் தலைமையில் நடைபெறும் இந்த போராட்டத்தை பொது செயலாளர் சந்திரபோஸ் தொடங்கி வைத்தார். மாவட்ட செயலாளர் தங்க மோகன், கணேசன், வின்சென்ட், ராஜன், மீரான், ஆறுமுகவேல் உட்பட பலர் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

போராட்டம் காரணமாக லாரிகளில் இருந்து மது பாட்டில்களை இறக்குவதிலும், அதனை டாஸ்மாக் கடைகளுக்கு கொண்டு செல்வதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் குமரி மாவட்டத்தில் மது தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது.

Tags:    

Similar News