திருவட்டார் அருகே அனுமதியின்றி செம்மண் கடத்தல்-ஜே.சி.பி. பறிமுதல்
- ஜே.சி.பி. மூலம் செம்மண் எடுப்பது தெரியவந்தது.
- போலீசாரை கண்டதும் ஜே.சி.பி. டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.
கன்னியாகுமரி :
குமரி மாவட்டத்தில் இருந்தும் பிற மாவட்டங்களில் இருந்தும் கேரளாவுக்கு குமரி மாவட்டம் வழியாக கனிம வளங்கள் அனுமதியின்றியும் அளவுக்கு அதிகமாகவும் கடத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து வருவாய்துறை யினரும் போலீசாரும் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதில் கனரக வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது தவிர மண் எடுக்க பயன்படுத்தும் ஜே.சி.பி. உள்ளிட்ட எந்திரங்களும் கைப்பற்றப்பட்டு உள்ளன.
இந்த நிலையில் திருவட்டார் பகுதியில் இருந்து அனுமதியின்றி செம்மண் எடுத்துச் செல்வதாக புகார் வந்தது. குமரன்குடி பகுதியில் இருந்து இந்த மண்ணை கடத்துவதாக கிராம நிர்வாக அலுவலர் செந்தில் குமாருக்கு தகவல் கிடைத்தது. இது குறித்து அவர், திருவட்டார் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
பின்னர் போலீசாருடன் இணைந்து சம்பவ இடத்தில் சோதனை நடத்தச் சென்றார். அப்போது அங்கு ஜே.சி.பி. மூலம் செம்மண் எடுப்பது தெரியவந்தது. போலீசாரை கண்டதும் ஜே.சி.பி. டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.
இதனை தொடர்ந்து போலீசார் ஜே.சி.பி.யை பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர். அதன் உரிமையாளர் யார்? செம்மண் தோண்டியது யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.