உள்ளூர் செய்திகள்

நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் உயர்மின் அழுத்த கம்பியில் சிக்கி மயில் சாவு

Published On 2023-04-22 09:22 GMT   |   Update On 2023-04-22 09:22 GMT
  • மயிலும் குடிநீர் உள்ளிட்ட பிற தேவைகளுக்காக வனத்தை விட்டு நகர்ப்புறங்களுக்கு வருகிறது.
  • ரெயில் நிலையத்தின் 2-வது பிளாட்பாரத்தில் அந்த மயில் திடீரென சுருண்டு விழுந்தது.

நாகர்கோவில் :

தற்போது கோடை காலம் என்பதால் வன விலங்குகள் குடிநீருக்காக இடம் பெயர்ந்து வருகின்றன. தேசிய பறவையான மயிலும் குடிநீர் உள்ளிட்ட பிற தேவைகளுக்காக வனத்தை விட்டு நகர்ப்புறங்களுக்கு வருகிறது.

மழை வருவதை தோகை விரித்து ஆடி முன்கூட்டியே வெளிப்படுத்தும் மயில், இன்று காலை நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் மின்சாரம் தாக்கி பலியானது பலருக்கும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:-

நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் இன்று காலை மக்கள் கூட்டம் அதிகமாக இருந்த நேரத்தில், அழகு மயில் ஒன்று அங்கு பறந்து வந்தது. அதனை கண்டு சிறுவர்-சிறுமிகள் மகிழ்ச்சி அடைந்து ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்.

அப்போது யாரும் எதிர்பாராதவிதமாக ரெயில் நிலையத்தின் 2-வது பிளாட்பாரத்தில் அந்த மயில் திடீரென சுருண்டு விழுந்தது. இதனை பார்த்து சிறுவர்-சிறுமிகள் அதிர்ச்சி அடைந்தனர். பெரியவர்கள் ஓடிச் சென்று மயிலை பார்த்தபோது, அது இறந்து விட்டது தெரிய வந்தது. வானில் உற்சாகமாக பறந்த மயில், தண்டவாளத்தின் மேல் பகுதியில் உள்ள உயர்மின் அழுத்த கம்பியில் பட்டதால் மின்சாரம் தாக்கி இறந்திருப்பது தெரியவந்தது.

இதுபற்றி தெரியவந்ததும் ரெயில்வே போலீசார், இறந்த மயிலின் உடலை மீட்டு போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். தொடர்ந்து வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து மயிலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து இறந்த மயிலை அவர்கள் எடுத்துச் சென்றனர். உயர்மின் அழுத்த கம்பியில் அடிபட்டு மயில் இறந்த சம்பவம், ரெயில் நிலையத்தில் நின்றவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News