நாகர்கோவிலில் மணிமேடை பகுதியில் மாயமான மோட்டார் சைக்கிள் வடசேரி பஸ் நிலையத்தில் மீட்பு
- போக்குவரத்து போலீசார் சோதனையில் சிக்கியது
- சி.சி.டி.வி. காமிராவின் காட்சிகளை போலீசார் ஆய்வு
நாகர்கோவில் :
நாகர்கோவில் பகுதியில் போக்குவரத்து போலீசார் அதிரடி வாகன சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
போக்குவரத்து விதி முறைகளை மீறுபவர்க ளுக்கும் போலீசார் அபராதம் விதித்து வருகிறார்கள். மேலும் வடசேரி பஸ் நிலை யம், அண்ணா பஸ் நிலையத்திற்குள் நிறுத்தப் பட்டிருக்கும் இருசக்கர வாகனங்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டு மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்து வருகி றார்கள்.
போக்குவரத்துக்கு இடையூறாக நோ பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. வடசேரி பஸ் நிலைய பகுதியில் கடந்த 12-ந்தேதி மோட்டார் சைக்கிள் ஒன்று நின்றது. அப்போது அங்கு சோதனையில் ஈடுபட்ட போக்குவரத்து போலீசார் அந்த மோட்டார் சைக்கிளுக்கு நோ பார்க்கிங்கில் நிறுத்தியதற்காக ரூ.500 அபராதம் விதித்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினமும் அங்கு சோதனை மேற்கொண்ட போது அதே இடத்தில் அந்த மோட்டார் சைக்கிள் நின்று கொண்டிருந்தது. போலீசார் மீண்டும் ரூ.500 அபராதம் விதித்தனர். இந்த நிலையில் நேற்றும் அதே இடத்தில் நின்றது. போலீசார் அந்த வாகனத்தின் நம்பர் பிளேட்டை ஸ்கேன் செய்து அபராதம் விதித்தனர். தொடர்ந்து 3 நாட்களாக ஒரே பகுதியில் நோ பார்க்கிங்கில் மோட்டார் சைக்கிள் நின்று கொண்டிருந்ததால் போலீசார் அந்த வாகனத்தின் உரிமையாளரை தொடர்பு கொண்டு பேசிய போது அவர் நாகர்கோவில் பகுதியை சேர்ந்த தங்கவேல் என்பது தெரியவந்தது. அவர் தனது மோட்டார் சைக்கிளை கடந்த வாரம் மணிமேடை பகுதியில் கடைக்கு வந்தபோது அந்த பகுதியில் நிறுத்தி இருந்ததாகவும் சாவியை எடுக்காமல் கடைக்கு சென்று விட்டு திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை என்றும் தெரிவித்தார்.
இது போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனே தங்கவேலிடம் அவரது மோட்டார் சைக்கிள் வடசேரி பஸ் நிலையம் பகுதியில் நிற்பதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் வடசேரி போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. வடசேரி போலீசாரும் சம்ப இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் பஸ் நிலையத்தில் நின்ற மோட்டார் சைக்கிளை வடசேரி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
ஏற்கனவே மோட்டார் சைக்கிள் மாயமானது குறித்து அதன் உரிமையாளர் தங்கவேல் புகார் செய்திருந்த நிலையில் அந்த மோட்டார் சைக்கிளை ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொண்ட னர்.
அந்த மோட்டார் சைக்கிளை திருடி சென்ற நபர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மணிமேடை மற்றும் மோட்டார் சைக்கிள் நிறுத்தப்பட்டிருந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராவின் காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.