கோப்பு படம்
மார்த்தாண்டம் அருகே குளத்தில் மூழ்கி தொழிலாளி பலி
- கானாகுளத்தில் குளிக்க செல்வதாக கூறிவிட்டு சென்றவர் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை
- மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட மருதன்கோடு செம்மாங்காலை பகுதியை சேர்ந்தவர் தாசையன் (வயது 65) கூலிதொழிலாளி.
இவருக்கு சுசீலா என்ற மனைவியும், 3 பெண் பிள்ளைகளும் உண்டு அவர்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. சம்பவத்தன்று அவரது மனைவியிடம் பக்கத்தில் உள்ள கானாகுளத்தில் குளிக்க செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார்.
குளிக்க சென்றவர் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை, இதை அடுத்து சுசீலா அவரது உறவுக்காரர் ஒருவரிடம் சம்பவத்தை கூறி குளத்தில் சென்று பார்க்கக் கூறியுள்ளார். அப்போது குளத்தின் கரையில் தாசையனுடைய துணி மற்றும் செருப்பு இருந்துள்ளது. சந்தேகம் அடைந்த அவர் குளத்தில் இறங்கி தேடிப் பார்த்துள்ளார். அப்போது தாசையன் குளத்தில் மூழ்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.
அவரை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் தாசையன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.