உள்ளூர் செய்திகள்

குழந்தை தொழிலாளர்களை ஆபத்தான பணிகளில் ஈடுபடுத்தினால் 2 ஆண்டுகள் வரை ஜெயில் - கலெக்டர் எச்சரிக்கை

Published On 2023-06-14 06:18 GMT   |   Update On 2023-06-14 08:05 GMT
  • ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
  • 5. மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையோ அல்லது இரண்டும் சேர்த்தோ தண்டனையாக வழங்கப்படும்.

நாகர்கோவில் :

குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

2009-ம் ஆண்டு இலவச மற்றும் கட்டாயக் கல்விக்கான குழந்தைகள் உரிமைச்சட்டத்தின் அடிப்படையில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவசக் கல்வி அளிக்க வேண்டும் என்ற சீரிய நோக்கத்தினை அடிப்படையாகக் கொண்டு குழந்தை மற்றும் வளர் இளம் பருவ தொழிலாளர் சட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது.

இந்த சட்டத்தின்கீழ் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளை எவ்வித பணியிலும் ஈடுபடுத்துவதும் 14 முதல் 18 வயதிற்குட்பட்ட வளர் இளம் பருவத்தினரை ஆபத்தான பணிகளில் ஈடுபடுத்துவதும் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த. சட்டத்தினை மீறுவோர்களுக்கு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அபராதமாகவோ அல்லது 5. மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையோ அல்லது இரண்டும் சேர்த்தோ தண்டனையாக வழங்கப்படும்.

இந்த சட்டத்திற்கு புறம்பாக குழந்தைகளை அல்லது வளர் இளம் பருவத்தினரை பணிக்கு அமர்த்தும் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர் ஆகியோர்களுக்கு தண்டனை வழங்கப்படும். இரண்டாம் முறையாக இந்த சட்ட விதிகளை மீறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட குழந்தைத் தொழிலாளரின் பெற்றோர்களுக்கும் அல்லது பாதுகாவலருக்கும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

எனவே மாவட்டத்திலுள்ள கடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் தொழிற் சாலைகளில் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளை எவ்வித பணிகளில் அமர்த்துவதோ, வளர் இளம் பருவத்தினரை அபாயகரமான தொழில்களில் ஈடுபடுத்துவதோ கூடாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தையொட்டி நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் உறுதிமொழி எடுக்கப்பட்டது. இதில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News