உள்ளூர் செய்திகள்

விவேகானந்தர் நினைவு மண்டபம்-திருவள்ளுவர் சிலை இடையே ரூ.37 கோடியில் கண்ணாடி கூண்டு பாலம்

Published On 2023-05-23 07:38 GMT   |   Update On 2023-05-23 07:38 GMT
  • அமைச்சர் எ.வ.வேலு நாளை அடிக்கல் நாட்டுகிறார்
  • விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இயக்கப்படும் படகு திருவள்ளுவர் சிலைக்கு இயக்கப்படுவதில்லை.

கன்னியாகுமரி :

நாட்டின் தென்கோடி யான கன்னியாகுமரிக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாட்டில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

அவர்கள் கடல் நடுவில் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை படகில் சென்று பார்வையிடுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் மூலம் பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகள் இயக்கப்பட்டு வருகிறது.

இயற்கையாகவே விவேகானந்தர் நினைவு மண்டப படகு தளத்தில் ஆழம் அதிகமாக உள்ளது. ஆனால் திருவள்ளுவர் சிலை படகு தளத்தில் ஆழம் குறைவாகவும், படகு நிறுத்தும் இடத்தில் அதிகப்படியான பாறைகளும் உள்ளன. இதனால் கடலில் நீரோட்டம் குறைவான காலங்களில் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இயக்கப்படும் படகு போக்குவரத்து திருவள்ளுவர் சிலைக்கு இயக்கப்படுவதில்லை.

இதன் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் திருவள்ளுவர் சிலைக்கு செல்ல முடியாத நிலை இருந்து வருகிறது. இதனால் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை இடையே பாலம் அமைக்க வேண்டும் என்று அரசுக்கு பல ஆண்டுகளாக சுற்றுலா பயணிகளும் பல்வேறு தமிழ் அமைப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதனை தொடர்ந்து விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை இடையே கண்ணாடி கூண்டு பாலம் அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

அதன்படி ரூ.37 கோடி செலவில் அமைய உள்ள கண்ணாடி கூண்டு பாலம் 97 மீட்டர் நீளமும், 4 மீட்டர் அகலமும் கொண்டதாக அமைக்கப்ப டுகிறது. இந்த பாலத்தின் மீது சுற்றுலா பயணிகள் நடந்து செல்லும் போது தாங்கள் நடந்துசெல்லும் பாதையின் கீழே கடல் அலையை ரசிக்கும் வண்ணமாக வெளிநாடு களில் அமைக்கப்பட்டு உள்ளது போல அமைக்கப்பட உள்ளது.

இதற்கான முதற்கட்ட ஆய்வு பணி கடந்த ஜூன் மாதம் நடந்தது. அப்போது விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை ஆகிய 2 பாறைகளின் மாதிரிகளை சேகரித்து சென்னை ஐ.ஐ.டி.க்கு அனுப்பப் பட்டது. அங்கு பாறைகளின் ஸ்திரத்தன்மையை ஆய்வு செய்யும் பணி நடந்தது. இந்த ஆய்வுகளின் முடிவுகளை பொறுத்து விரைவில் பாலத்துக்கான கட்டுமான பணிகள் தொடங்கும் என்றும் ஒரு வருடத்துக்குள் பாலப்பணிகள் நிறைவடையும் என்றும் அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர்.

இந்த நிலையில் கண்ணாடி கூண்டு பாலப்பணி தொடக்கத்திற் கான அடிக்கல் நாட்டு விழா நாளை (24-ந்தேதி) நடக்கிறது. நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு விழாவில் கலந்துகொண்டு அடிக்கல் நாட்ட உள்ளார். விழாவில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர். மேயர் மகேஷ் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

விழாவில் பங்கேற்ப தற்காக அமைச்சர் எ.வ. வேலு இன்று (செவ்வாய்க் கிழமை) மாலை 6 மணிக்கு கன்னியாகுமரி வருகிறார். அவர் குமரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு திட்ட பணிகளை ஆய்வு செய்ய உள்ளார் என்றும் கூறப்படுகிறது.

Tags:    

Similar News