உள்ளூர் செய்திகள்

நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் ரூ10 கட்டணத்தில் பேட்டரி கார்கள் இன்று முதல் இயக்கம்

Published On 2023-11-06 08:53 GMT   |   Update On 2023-11-06 08:53 GMT
  • பெண் டிரைவர்கள் நியமனம்
  • முதியவர்கள் நலனை கருத்தில் கொண்டு அந்த நடைமேடைகளுக்கும் பேட்டரி கார்களை இயக்கவேண்டும்

நாகர்கோவில் :

நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பயணிகள் வசதிக்காக பேட்டரி கார்கள் இயக்கப்பட்டன. அதன்பிறகு டெண்டர் முடிவுக்கு வந்ததாலும் கொரோனே காரணமாகவும் பேட்டரி கார்கள் இயக்கம் நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் தற்போது சிறப்பு ரெயில்கள் மற்றும் கூடுதல் ரெயில்கள் இயக்கப்படுவதால் பயணிகள் வரத்து அதிகமாக உள்ளது. இதில் 2 மற்றும் 3-வது நடைமேடைகளில், சென்னை மற்றும் பெங்களூரூ உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் ரெயில்கள் நிறுத்தப்படுகின்றன.

அந்த ரெயில்களில் வரும் பயணிகள், முதியோர் நுழைவு வாயில் செல்ல சிரமப்பட்டனர். எஸ்கலேட்டர், லிப்ட் வசதி இருந்தாலும் பல நேரங்களில் அவை இயங்குவதில்லை. எனவே பேட்டரி கார் வசதியை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று பயணிகள் ரெயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர்.

இதனை தொடர்ந்து பேட்டரி கார் இயக்க டெண்டர் விடப்பட்டது. இது முடிவுக்கு வந்ததும் 2 பேட்டரி கார்கள், நாகர்கோவில் ரெயில் நிலையம் கொண்டு வரப்பட்டது. அதனை இயக்க 2 பெண் டிரைவர்கள் நியமிக்கப்பட்டனர். தொடர்ந்து இன்று முதல் அந்தக் கார்கள் இயக்கப்பட்டன.

ஒரு பயணிக்கு ரூ.10 கட்டணத்தில் பேட்டரி கார் இயக்கப்பட்டது. இந்தக் கார்கள், முதல் நடைமேடையில் மட்டும் இயக்கப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால் பெங்களூரூ மற்றும் சென்னை சிறப்பு ரெயில்கள் 2 மற்றும் 3-வது நடைமேடைகளில் தான் வந்து செல்கின்றன. இந்த ரெயில்களில் குழந்தைகளுடன் வரும் பெண்கள் மற்றும் முதியவர்கள் நலனை கருத்தில் கொண்டு அந்த நடைமேடைகளுக்கும் பேட்டரி கார்களை இயக்கவேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News