உள்ளூர் செய்திகள்

திருவட்டார் ஆதிகேசவ ஆலயத்தில் உள்ள நரசிம்மர் கோவிலில் உண்டியல் கொள்ளை - கண்காணிப்பு காமிராவையும் எடுத்து சென்ற மர்மநபர்கள்

Published On 2023-01-19 06:19 GMT   |   Update On 2023-01-19 06:19 GMT
  • திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் திருக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் முதலில் ஆதிகேசவபெருமாளை கும்பிட்ட பிறகு இந்த கோவிலுக்கு சென்று சாமி கும்பிடுவது வழக்கம்.
  • சம்பவ இடத்திற்கு வந்த திருவட்டார் காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டதில் ஆலயத்தின் ஒரு பகுதியில் பெரிய அளவிலான ஏணி வைத்து உள்ளே சென்றுள்ளனர்.

கன்னியாகுமரி :

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஆலயங்களுள் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் திருக்கோவிலும் ஒன்று.

இத்திருக்கோவில் வளாகத்தில் தென்கிழக்கு பகுதியில் நரசிம்மர் மடம் திருக்கோவில் அமைந்துள்ளது. கேரளா மாநிலம் திருச்சூர் நடுவில் மடத்திற்கு சொந்தமான இத்திருக்கோவிலில் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் திருக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் முதலில் ஆதிகேசவபெருமாளை கும்பிட்ட பிறகு இந்த கோவிலுக்கு சென்று சாமி கும்பிடுவது வழக்கம்.

தினமும் அதிகளவில் பக்தர்கள் வந்து தங்கள் நேர்ச்சைகளை செய்து செல்வது வழக்கம். இந்நிலையில் இன்று காலையில் ஆலய அர்ச்சகர் ஷம்புநாத் ஆலயத்தில் வழக்கமாக நடைதிறப்பதற்காக வந்தார்.

அப்போது ஆலய உண்டியல் உடைக்கபட்டது இருப்பது தெரியவந்தது. இது குறித்து திருவட்டார் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திருவட்டார் காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டதில் ஆலயத்தின் ஒரு பகுதியில் பெரிய அளவிலான ஏணி வைத்து உள்ளே சென்றுள்ளனர். பின்னர் ஆலயத்தின் மடப்பள்ளியில் வைக்கப்பட்டிருந்த அரசி பானையை திறந்து அதில் வைக்கபட்டிருந்த சாவிகளை எடுத்துள்ளனர். பின்னர் அங்கிருந்த சிறியதும் பெரியதுமான 2 உண்டியல்கள் உடைத்துள்ளனர். அதிலிருந்த ரூபாய்நோட்டுகளை கொள்ளையர்கள் எடுத்து சென்றுள்ளனர். அதில் இருந்த சில்லறை காசுகளை கொள்ளையர்கள் விட்டுசென்றுள்ளனர் .

இத்திருக்கோவிலில் அன்னபூர்ணேஸ்வரி, இரண்டு யோகநரசிம்மர் ஸ்ரீதேவி பூதேவி உட்பட 4 பஞ்சலோக விக்ரகங்கள் உள்ள நிலையில் உண்டியலை உடைத்து பணத்தை மட்டும் கொள்ளையடித்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உண்டியல் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர் அங்கு வைக்கபட்டிருந்த சி.சி.டி.வி. காட்சி பதிவு பெட்டியையும் தூக்கிசென்றுள்ளனர். இது குறித்து வழக்குபதிவு செய்த திருவட்டார் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு கொள்ளையர்களை தேடிவருகின்றனர்.

பிரசித்திபெற்ற திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் திருக்கோவிலில் 1992-ம் ஆண்டு மிகப்பெரிய கொள்ளை சம்பவம் நடைபெற்று கோவிலில் இருந்த பெரும் மதிப்புள்ள நகைகளை கொள்ளை அடித்து சென்றனர். இப்போது மீண்டும் கொள்ளை சம்பவம் நடந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News