உள்ளூர் செய்திகள்

கொட்டாரம் அருகே தோட்டத்தில் தீப்பிடித்து வாழை, தென்னை மரங்கள் எரிந்து நாசம்

Published On 2023-08-29 07:29 GMT   |   Update On 2023-08-29 07:29 GMT
  • 3 மணி நேரம் போராடி தீ அணைக்கப்பட்டது
  • ஆயிரக்கணக்கான வாழை மற்றும் தென்னை மரங்கள் தீயில் கருகி நாசமாகின

கன்னியாகுமரி, ஆக.29-

குமரி மாவட்டம் கொட்டாரம் அருகே உள்ள அச்சன்குளம் பச்சை பத்து பகுதியில்5ஏக்கர் பரப்பளவில் வாழை மற்றும் தென்னை பயிரிடப்பட்டு உள்ளது. மேலும்2 ஏக்கர் நிலப்பரப்பில் தற்போது தண்ணீர் இல்லாததால் நெல் பயிரிடப்படாமல் புல் பூண்டுகள் மற்றும் சம்பை புல்கள் வளர்ந்து புதர் மண்டி கிடக்கிறது.

இந்த நிலையில் நேற்று இரவு இந்த தரிசு நிலப் பகுதியில் வளர்ந்து கிடந்த புல் பூண்டுகளில் திடீர் என்று தீப்பிடித்தது. காற்று பலமாக வீசியதால் தீ மனவளவென்று பிடித்து அந்த பகுதி முழுவதும் பரவியது. இதனால் அந்த பகுதி முழுவதும் ஒரே புகை மண்டலமாக காட்சியளித்தது. இதைப் பார்த்த அச்சன்குளம் பகுதி ஊர் பொதுமக்கள் அங்கு திரண்டு வந்தனர். அவர்கள் இந்த தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

மேலும் இதுபற்றி கன்னியாகுமரி தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் கன்னியாகுமரி தீயணைப்பு நிலைய அலுவலர் பென்னட்தம்பி மற்றும் சிறப்பு நிலைய அலுவலர் பாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் தீயணைக்கும் படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

ஆனால் தீ எரிந்து கொண்டிருந்த அந்த பகுதிக்கு தீயணைப்பு வண்டி செல்ல முடியாததால் தீயணைக்கும் படை வீரர்கள் அந்த பகுதிக்கு நீண்ட தூரம் நடந்து சென்று ஊர் பொதுமக்களுடன் இணைந்து இரவு10-30மணி வரை சுமார் 3 மணி நேரம் போராடி தீயை மேலும் பரவவிடாமல் அணைத்தனர்.

இருப்பினும் சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான வாழை மற்றும் தென்னை மரங்கள் தீயில் கருகி நாசமாகின. இதனால் லட்சக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. வாழை மற்றும் தென்னை பயிர்கள் எரிந்து நாசமான தினால் ஏற்பட்ட நஷ்டத்தினால் விவசாயிகள் மிகவும் கவலை அடைந்து உள்ளனர்.

Tags:    

Similar News