உள்ளூர் செய்திகள்

நாகர்கோவில் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர 7-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்

Published On 2023-05-29 08:42 GMT   |   Update On 2023-05-29 08:42 GMT
  • கலெக்டர் ஸ்ரீதர் தகவல்
  • விண்ணப்ப கட்டண தொகையான ரூ.50-ஐ விண்ணப்பதாரர் ஆன்லைன் மூலமாக செலுத்தலாம்

நாகர்கோவில் :

குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

எஸ்.எம்.ஆர்.வி. அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதில் சேர விரும்பும் மாணவர்கள் வருகிற 7-ந் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். www.skilltraining.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டண தொகையான ரூ.50-ஐ விண்ணப்பதாரர் ஆன்லைன் மூலமாக செலுத்தலாம். குறைந்தபட்ச கல்வி தகுதி 8-ம் வகுப்பு தேர்ச்சி (ஆடை தயாரித்தல் தொழிற்பிரிவு மட்டும்) மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

குறைந்தபட்ச வயது வரம்பு 15 மற்றும் அதிகபட்ச வயது வரம்பு இல்லை. தகுதி வாய்ந்த மாணவிகள் பல்வேறு பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளான கம்மியர் மின்னணுவியல், டெஸ்க் டாப் பப்ளிசிங் ஆப்ரேட்டர், கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் மற்றும் புரோகிராம் அசிஸ்டெண்ட், ஆடை தயாரித்தல் (8-ம் வகுப்பு தேர்ச்சி), சுருக்கெழுத்து (ஆங்கிலம்), நவீன ஆடை வடிவமைப்பு தொழிற்நுட்பம், மருத்துவ மின்னணுவியல் நுட்பவியலாளர், கட்டிடக்கலை படவரைவாளர் ஆகிய தொழிற்பிரிவில் சேர்ந்து பயிற்சி பெறலாம். பயிற்சி கட்டணம் முற்றிலும் இலவசம்.

மாணவிகள் தொழிற்கல்வி சேர்க்கைக்கு நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் உள்ள எஸ்.எம்.ஆர்.வி. அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்துக்கு (மகளிர்) நேரில் வந்து இலவசமாக விண்ணப்பிக்கலாம்.பயிற்சி பெறுபவர்களுக்கு தரமான பயிற்சி வழங்கப்படுவதுடன் விலையில்லா மடிக்கணினி, மிதிவண்டி, சீருடை, பாடபுத்தகங்கள், காலணி, மாதந்தோறும் வருகைக்கேற்ப ரூ.750 உதவித்தொகை மற்றும் கட்டணமில்லா பஸ் சலுகை வழங்கப்படும்.

மேலும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படும் விடுதிகளில் தங்கி பயிற்சி பெற வசதிகள் ஏற்படுத்தி தரப்படும். தமிழக அரசு வழங்கும் உயர்கல்வி உதவித்தொகை (6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையில் அரசு பள்ளியில் பயின்ற) மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை கூடுதலாக வழங்கப்படும்.

மேலும் தொழிற்பிரிவில் படிக்கும் போதே பிரபல தொழிற்நிறுவனங்களில் உதவி தொகையுடன் வேலை வழங்க ஏற்பாடு செய்யப்படும். பயிற்சி முடித்த பயிற்சியாளர்களுக்கு பிரபல தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதற்கும் ஏற்பாடு செய்து தரப்படும்.

10-ம் வகுப்பு முடித்த பின்னர் 2 ஆண்டுகள் ஐ.டி.ஐ. பயிற்சி முடித்த பயிற்சியாளர்கள் மொழிப்பாடங்களை மட்டும் எழுதி 12-ம் வகுப்பு அரசு சான்றிதழ் பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News