உள்ளூர் செய்திகள்

கிள்ளியூர் தொகுதியில் மினி விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும்

Published On 2023-10-30 06:50 GMT   |   Update On 2023-10-30 06:50 GMT
  • அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. கோரிக்கை மனு
  • கிள்ளியூர் தாலுகா பொதுமக்கள் நலன் கருதி தாலுகாவிற்கு ஒரு நீதிமன்றம்

மார்த்தாண்டம்,அக்.30-

குமரி மாவட்டத்தில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம், தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. கோரிக்கை மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, இளைஞர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் விளையாடுவதற்கும் முறையாக பயிற்சிகள் மேற்கொள்வதற்கும் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதியில் அரசு சார்பில் அனைத்து வசதிகளுடன் கூடிய விளையாட்டு மைதானம் இல்லை. சட்டமன்றத்தில் மானிய கோரிக்கையின் போது அரசு சார்பில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் மினி விளையாட்டு மைதானம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட மினி விளையாட்டு மைதானத்தை கிள்ளியூரில் அமைத்து தர வேண்டும்.

முஞ்சிறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, குழித்துறை தாமிரபரணி ஆற்றின் கரையோர பகுதிகளான அதங்கோடு, செங்கிலம், மங்காடு, ஆலு விளை, மாமுகம், பணமுகம், பள்ளிக்கல், முஞ்சிறை, பார்த்திவபுரம், விரிவிளை, வைக்கலூர், மரப்பாலம், பருத்திக்கடவு, கழியான்குழி, ஈழக் குடிவிளாகம், பரக்காணி போன்ற பகுதிகளில் மழை காலங்களில் ஏற்படும் பெருவெள்ளத்தால் வீடுகளில் ஆற்றுநீர் புகுந்து விடுகிறது. இதனால் ஆற்றின் கரையோர பகுதிகளில் உள்ள வீடுகள் ஆற்றில் அடித்து செல்லப்படுகிறது. இதனால் அப் பகுதிகளில் தாமிரபரணி ஆற்றின் இருப்பக்கங்களிலும் நிரந்தர பக்கசுவர்கள் அமைத்து அங்கு குடியிருக்கும் பொது மக்களையும் அவர்களின் வீடுகளையும் பேரழிவிலிருந்து பாதுகாக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கிள்ளியூர் தாலுகா பொதுமக்கள் நலன் கருதி தாலுகாவிற்கு ஒரு நீதிமன்றம் என்கிற அடிப்படையில் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதியிலுள்ள அனைத்து வருவாய் கிராமங்களையும் உட்படுத்தி கிள்ளியூர் பகுதியில் உரிமையியல் நீதிமன்றம் மற்றும் குற்றவியல் நீதிமன்றம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News