உள்ளூர் செய்திகள்

குழித்துறை அருகே ஓட்டல், காய்கறி கடையை உடைத்து ரூ.62 ஆயிரம் பணம் கொள்ளை

Published On 2022-06-25 10:10 GMT   |   Update On 2022-06-25 10:10 GMT
  • ஏற்கனவே 9 மாதங்களுக்கு முன்பும் இதுபோல பணம் கொள்ளை அடிக்கப்பட்டது.
  • கண்காணிப்பு காமிரா காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை

கன்னியாகுமரி:

களியக்காவிளையை அடுத்த படந்தாலுமூடு பகுதியை சேர்ந்தவர் ராஜூ. அரசியல் பிரமுகர்.

குழித்துறை பகுதியில் இவர் காய்கறி மொத்த விற்பனை கடை நடத்தி வருகிறார். நேற்றிரவு விற்பனை முடிந்த பின்பு 11 மணிக்கு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார்.

இன்று காலை கடையை திறக்க வந்தார். அப்போது கடைக்கு சென்ற போது அங்கிருந்த பொருட்கள் சிதறி கிடந்தன.

மேலும் கடையில் இருந்த மேஜை உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.56 ஆயிரம் பணம் கொள்ளை போயிருந்தது. மேலும் கடையில் வைக்கப்பட்டிருந்த கேமிராக்களும் மாயமாகி இருந்தது.

அதிர்ச்சி அடைந்த ராஜூ, அருகில் உள்ள கடைகளில் விசாரித்த போது, காய்கறி கடையின் அருகே உள்ள ஒரு ஓட்டலிலும் கொள்ளை நடந்து இருப்பது தெரியவந்தது. அங்கும் ரூ.6 ஆயிரம் ரொக்க பணம் திருடப்பட்டிருந்தது.

ஓட்டல் மற்றும் காய்கறி கடையில் மொத்தம் ரூ.62 ஆயிரம் பணம் கொள்ளை போயிருந்தது. இதுபற்றி ராஜ், மற்றும் ஓட்டல் உரிமையாளர் முகமது ரிபாய் ஆகியோர் களியக்காவிளை போலீசில் புகார் செய்தனர். போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில் மர்ம நபர் ஒருவர் குழித்துறை தபால் நிலையம் அருகே இருந்து நடந்து வந்து இரண்டு கடைகளையும் நோட்டமிடுவது பதிவாகி இருந்தது.

இதனை கைப்பற்றிய போலீசார் அந்த காட்சிகளை கொண்டு கொள்ளை அடித்த நபரை தேடிவருகிறார்கள்.

கொள்ளை நடந்த ஓட்டலில் ஏற்கனவே 9 மாதங்களுக்கு முன்பும் இதுபோல பணம் கொள்ளை அடிக்கப்பட்டது. தற்போது 2-வது முறையாக கொள்ளை சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News