உள்ளூர் செய்திகள்

களியக்காவிளை அருகே 26 டன் ரேசன் அரிசி பறிமுதல்

Published On 2022-11-14 08:31 GMT   |   Update On 2022-11-14 08:31 GMT
  • பறிமுதல் செய்யப்பட்ட ரேசன் அரிசியை காப்பிக்காடு அரசு நுகர்வோர் வாணிப கிடங்கில் ஒப்படைப்பு
  • கடத்தல் வாகனத்தை தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைப்பு

கன்னியாகுமரி:

தமிழக கேரள எல்லைப்பகுதி வழியாக தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி மற்றும் மானிய மண்எண்ணை கடத்துவது தொடர்ந்து நடந்து வருகிறது. இதனை தடுக்க போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று களியக்காவிளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் தலைமையில் போலீசார் கல்லுக்கட்டி பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது சந்தேகத்துக்கு இடமாக 2 லாரிகள் வந்துகொண்டிருந்தன. லாரிகளை நிறுத்துமாறு போலீசார் சைகை காட்டினர். அந்த லாரிகள் நிற்காமல் சென்று விட்டன. உடனடியாக போலீசார் தொடர்ந்து சுமார் 1 கிலோமீட்டர் தூரம் துரத்தி சென்று திருத்தோபுரம் பகுதியில் வைத்து மடக்கி பிடித்தனர்.

டிரைவர்கள் லாரிகளை சாலையில் நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டனர். போலீசார் லாரிகளை சோதனை செய்த போது அதில் சுமார் 26 டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ரேஷன் அரிசியை கேரளாவிற்கு கடத்தி செல்வது தெரியவந்தது. இதை தொடர்ந்து லாரியை பறிமுதல் செய்த போலீசார் கடத்தல் வாகனத்தையும், அரிசியையும் உணவு தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட ரேசன் அரிசியை காப்பிக்காடு அரசு நுகர்வோர் வாணிப கிடங்கிலும், கடத்தல் வாகனத்தை தாசில்தார் அலுவலகத்திலும் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து தப்பியோடிய ஓட்டுநர்கள் யார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News