குளச்சல் பகுதியில் சுற்றித்திரியும் மிளா குட்டிகளை படத்தில் காணலாம்.
குளச்சல் பகுதியில் சுற்றித்திரியும் மிளா
- வனத்துறையினர் விசாரணை
- 10 நாட்களுக்கு முன்பு மண்டைக்காடு பகுதியில் சுற்றித்திரிந்தது
கன்னியாகுமரி:
குளச்சல் தும்பாக்காடு குடியிருப்பு பகுதியில் நேற்று நள்ளிரவு 2 கடமான் (மிளா) குட்டிகள் நின்று கொண்டிருந்தன. இதனைக்கண்ட அப்பகுதி இளைஞர் ஒருவர் தனது செல்போனில் அந்த மிளா குட்டிகளை படம் எடுத்து வனத்துறையினருக்கு அனுப்பி தகவல் தெரிவித்தார்.
தகவலறிந்த வனத்துறை ஊழியர்கள் தும்பாக்காடு குடியிருப்பு பகுதிக்கு விரைந்து வந்தனர்.அதற்குள் மிளா குட்டிகள் மாயமாகி விட்டது. இதனால் வனத்துறை ஊழியர்கள் திரும்பி சென்றனர்.கடந்த 10 நாட்களுக்கு முன்பு மண்டைக்காடு அருகே பிலாவிளை பகுதி வாழைத்தோட்டத்தில் இரவு இது போல் மிளா சுற்றித்திரிந்தது என அப்பகுதியினர் மண்டைக் காடு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
பின்னர் வனத்துறையினர் வருவதற்கு முன்பு மிளா அங்கிருந்து மாயமாகி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை யாரேனும் சட்ட விரோதமாக வனப்பகுதியில் இருந்து பிடித்து வந்தார்களா? மாயமான கடமான் குட்டிகள் அப்பகுதி தோட்டத்தில் பதுங்கி உள்ளதா?எனவும் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.