எம். டி .எம். ஏ.
மார்த்தாண்டத்தில் போதை பொருள் கடத்தல்
- குற்றவாளியை பிடிக்க தனிப்படை ராஜஸ்தானுக்கு விரைந்தது
- தப்பி ஓடிய கணேஷ் மற்றும் அவரது சக கூட்டாளிகளை பிடிக்க ராஜஸ்தான் போலீசின் உதவியை நாட குமரி மாவட்ட போலீசார் முயற்சி
கன்னியாகுமரி:
குமரி மாவட்டம் மற்றும் கேரளாவில் போதைப் பொருள்களின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் விதத்தில் போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நேற்று படந்தாலு மூடு சோதனை சாவடி யில் தனிப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகேஸ்வர ராஜ் தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்ட போது சொகுசு கார் வேகமாக வந்தது.
அந்த காரை போலீசார் நிறுத்தும்படி கூறியும் நிற்காமல் சென்றதால் அதனை விரட்டிச் சென்று குழித்துறை சப்பாத்து பாலம் பகுதியில் போலீசார் மடக்கினர்.
காரில் இருந்த ஓட்டுநர் மற்றும் 2 பேரை பிடித்து விசாரித்த போது அவர்களி டமிருந்து எம். டி .எம். ஏ. என்ற 300 கிராம் போதை பொருள் கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து போலீஸார் நடத்திய விசாரணையில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கணேஷ் என்பவர் தான் இதனை கடத்தி வந்ததாகவும் அவர் காரில் இருந்து தப்பி சென்று விட்டதும் தெரியவந்தது. மேலும் காரில் வந்த 2 பேர்
மார்த்தாண்டத்தில் ஜவுளிக்கடை நடத்தி வரும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த புத்தாரம் மகன் பிரகாஷ் (வயது30) மற்றும் கிருஷ்ணாலால் மகன் ராஜேஷ் (27) என தெரியவந்தது.
இவர்கள் மூலம் ராஜஸ்தா னிலிருந்து கணேஷ் போதைப் பொருளை கடத்தி வந்து குமரி மாவட்டம், கேரளா, பெங்களுர் உட்பட பல இடங்களில் புழக்கத்தில் விட்டுள்ளான்.
இந்தநிலையில் தப்பி ஓடிய கணேஷ் மற்றும் அவரது சக கூட்டாளிகளை பிடிக்க ராஜஸ்தான் போலீசின் உதவியை நாட குமரி மாவட்ட போலீசார் முயற்சி மேற்கொண்டுள்ளனர். மேலும் அவர்களை பிடிக்க குமரி மாவட்ட தனிப்படை ராஜஸ்தான் சென்றுள்ளது.