உள்ளூர் செய்திகள்

கஞ்சி காய்ச்சும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்.

செண்பகராமன் புதூர் சமத்துவபுரம் அருகே சாலையை சீரமைக்க கேட்டு கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடத்திய பொதுமக்கள்

Published On 2023-01-25 08:13 GMT   |   Update On 2023-01-25 08:13 GMT
  • கடந்த 4 ஆண்டுகளாக இந்த சாலை பழுதடைந்த நிலையில் உள்ளது.
  • அடுத்த கட்டமாக அரசு பஸ்களை சிறை பிடித்து சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை

கன்னியாகுமரி:

குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியை அடுத்த செண்பகராமன்புதூர் அருகே சமத்துவபுரம் உள்ளது.

இங்குள்ள மரப்பாலம் முதல் பொய்கை அணை வரை பொதுப்பணித்துறைக்கு சொந்தமான சாலை உள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக இந்த சாலை பழுதடைந்த நிலையில் உள்ளது.

இதனால் அந்த சாலை வழியே பொதுமக்கள், பள்ளி மாணவ- மாணவிகள் நடந்து செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனை சரி செய்யக்கோரி பொதுமக்கள் மற்றும் பஞ்சாயத்து நிர்வாகம் பல தடவை மனு செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், ஊராட்சி மன்ற தலைவர் கல்யாண சுந்தரம் தலைமையில் துணைத் தலைவர் தேவதாஸ் முன்னிலையில் இன்று காலை கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடத்தினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத வகையில் நடைபெற்ற இந்தப் போராட்டம் குறித்து அந்த பகுதியைச் சேர்ந்த பெண்கள் கூறும் போது, இனியும் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை என்றால் அடுத்த கட்டமாக அரசு பஸ்களை சிறை பிடித்து சாலை மறியல் போராட்டம் நடத்துவோம் என்றனர்.

Tags:    

Similar News