கோப்பு படம்
தக்கலை அருகே சப்-இன்ஸ்பெக்டரை கொல்ல முயற்சி
- ஆட்டோ டிரைவர் கைது
- 2 பேருக்கு வலை வீச்சு
கன்னியாகுமரி:
தக்கலை அருகே உள்ள புலிப்பணம் பகுதியை சேர்ந்தவர் கருணாகரன் (வயது 57), இவர் திருவட்டார் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.
இவர் நேற்று பணி முடிந்து திரும்பும் போது சுவாமியார் மடத்தில் உள்ள ஒரு கடையில் பொருட்கள் வாங்கி கொண்டிருந்தார். அப்போது அங்கு ஆட்டோவில் 3 பேர் கொண்ட கும்பல் மது அருந்தி கொண்டு இருந்தனர்.
இந்நிலையில் போலீசாரை பார்த்ததும் அவர்கள் அங்கிருந்து செல்ல முயன்றனர். அப்போது ஆட்டோவை எடுக்கும் போது சப்-இன்ஸ்பெக்டரின் மோட்டார் சைக்கிளை கீழே தள்ளி உள்ளனர். இதனால் சப்-இன்ஸ்பெக்டருக்கும், 3 பேர் கும்பலுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த 3 பேரும் சேர்ந்து கருணாகரனை தாக்கி, அரிவாளால் வெட்ட முயன்றுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த கருணாகரன் தக்கலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து கருணாகரன் தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் நெப்போலியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். இந்நிலையில் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கியது காட்டாத்துறையை சேர்ந்த ராஜேஷ் (வயது 34) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் தாக்குதலில் 2 பேரை வலை வீசி தேடி வருகின்றனர்.