கனியாமூர் பள்ளி கலவரம்- மேலும் 3 பேர் கைது
சின்னசேலம்:
கள்ளக்குறிச்சி அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி படித்த பிளஸ்-2 மாணவி ஸ்ரீமதி உயிரிழந்ததை தொடர்ந்து, கடந்த ஜூலை17-ந் தேதி நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது. இதில் கலவரக்காரர்கள் போலீசாரின் பஸ் மற்றும் பள்ளி பஸ் உள்ளிட்டவைகளை அடித்து நொறுக்கி, சேதப்படுத்தி தீ வைத்தனர்
இது தொடர்பாக சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் சி.சி.டி.வி., காட்சிகளின் ஆதாரத்தை கொண்டு கலவரத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து வருகின்றனர்.
இந்நிலையில் சின்னசேலம் அருகே ஏரவார் கிராமத்தை சேர்ந்த புஷ்பராஜ், (வயது28), வேல்முருகன் (29) ஆகியோர் கலவரத்தின் போது போலீசாரின் வாகனத்தை சேதப்படுத்தியது தெரியவந்தது.
அதேபோல் கள்ளக்குறிச்சி அண்ணா நகரை சேர்ந்த அவிஷ் ஸ்ரீ முகந்த் (20) பள்ளியில் இருந்த நாற்காலிகள் மற்றும் மேஜைகளை அடித்து நொறுக்கியதும் தெரியவந்தது.
இதனையடுத்து சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் 3 பேரையும் கைது செய்து, கள்ளக்குறிச்சி2-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கடலுார் மத்திய சிறையில் அடைத்தனர்.