உள்ளூர் செய்திகள்

ஜெயலலிதாவின் கார் டிரைவர் மனைவிக்கு கொலைமிரட்டல்- கைதான உறவினர் சிறையில் அடைப்பு

Published On 2022-06-29 05:32 GMT   |   Update On 2022-06-29 05:32 GMT
  • கொடநாடு கொலை, கொள்ளை வழக்குடன் கனகராஜ் வழக்கையும் சேர்த்து கோவை மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
  • கனகராஜின் மனைவி கலைவாணி ஆத்தூரில் இருந்து சென்னை கே.கே.நகர் பாலை தெருவில் உள்ள ஒரு வீட்டில் தனது குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

சேலம்:

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் 5 ஆண்டுகளுக்கு முன்பு காவலாளி கொன்று கொள்ளை சம்பவம் நடந்தது. இந்த வழக்கில் தொடர்புடையவராக கருதப்பட்ட சேலம் மாவட்டம் எடப்பாடி சமுத்திரம் சித்திரை பாளையத்தை சேர்ந்த கனகராஜ் ஆத்தூரில் மர்மமான முறையில் வாகன விபத்தில் உயிரிழந்தார். இவர் ஜெயலலிதாவின் கார் டிரைவர் ஆவார்.

இந்த நிலையில் தன் கணவர் சாவில் சந்தேகம் இருப்பதாக கனகராஜ் மனைவி கலைவாணி புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கொடநாடு கொலை, கொள்ளை வழக்குடன் கனகராஜ் வழக்கையும் சேர்த்து கோவை மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். வழக்கில் ஆதாரங்களை அளித்து சாட்சியை கலைத்ததாக கனகராஜன் அண்ணன் தனபாலை கோடநாடு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சிறையில் இருந்த அவர் சமீபத்தில் ஜாமினில் வெளியே வந்தார். இதற்கிடையே கனகராஜின் மனைவி கலைவாணி ஆத்தூரில் இருந்து சென்னை கே.கே.நகர் பாலை தெருவில் உள்ள ஒரு வீட்டில் தனது குழந்தைகளுடன் இடம்பெயர்ந்து அங்கு வசித்து வருகிறார். இதற்கிடையே கலைவாணியை கனகராஜன் மற்றொரு அண்ணனான எடப்பாடி சமுத்திரம் சித்திரைபாளையத்தை சேர்ந்த பழனிவேல் (வயது 44) தொடர்பு கொண்டு பேசினார். அதில் கனகராஜ் பெயரில் பணிக்கன் ஊரில் உள்ள இடத்தை விட்டு தருவதாகவும், அதற்காக ஊருக்கு வரும்படியும் அழைத்தார். இதையடுத்து கடந்த 3-ந் தேதி தனது அண்ணனுடன் கலைவாணி தாரமங்கலத்துக்கு வந்தார் .

அப்போது அங்கு வந்த பழனிவேல், கலைவாணியை பணிக்கனூர் ஊரிலுள்ள கோவிந்தராஜ் என்பவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அங்கு வைத்து நிலத்தை வாங்க வந்தவர்களை அறிமுகப்படுத்தி பேசினார். அப்போது திடீரென நிலத்தை விற்க முடியாத அளவிற்கு செய்துவிடுவேன் என பழனிவேல் பேசியதுடன் நிலத்தை வாங்க வந்தவர்களை திருப்பி அனுப்பி வைத்தார்

ஏன் இப்படி செய்தீர்கள் என கலைவாணி கேட்டதற்கு உனது புகாரால் தான் எனது அண்ணன் தனபால் சிறையில் அடைக்கப்பட்டார். இதுவரை ரூ.4 லட்சம் செலவு ஆகி உள்ளது. ஆனால் செலவான பணத்தை கொடுத்துவிட்டு வழக்கையும் வாபஸ் வாங்க வேண்டும். இல்லையென்றால் கொன்று விடுவேன் என மிரட்டல் விடுத்து சேலையை பிடித்து இழுத்து மானபங்கம் செய்ததாக கூறப்படுகிறது .

அங்கிருந்து தப்பிய கலைவாணி ஜலகண்டாபுரம் போலீசில் புகார் கொடுத்தார். அதில் எனது கணவரின் அண்ணன் பழனிவேலால் எனக்கும் எனது குழந்தை உயிருக்கும் ஆபத்து உள்ளது அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினார். பின்னர்பழனிவேல் மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை 294(3), 195 ஏ, 354, 506 உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து பழனிவேல் கைது செய்த போலீசார் அவரை சேலம் சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News