சேலம் மாவட்டத்தில் பொதுமக்கள் வசிக்கும் 382 ஏக்கர் நிலத்தை வருவாய்த்துறை பறிக்க துடிப்பதா?- ராமதாஸ் கண்டனம்
- உண்மையில் அந்த நிலம் 5 கிராம மக்களுக்கு சொந்தமானது ஆகும்.
- 5 கிராம மக்கள் பயன்படுத்தி வரும் நிலங்களை பறிக்கக் கூடாது.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி வட்டத்திற்குட்பட்ட கணவாய்ப்புதூர், கேதுநாயக்கன்பட்டி ஆகிய கிராமங்களில் பரந்து விரிந்து கிடக்கும் 382 ஏக்கர் நிலங்களில், அங்குள்ள நாராயணபுரம், கே.மோரூர், லேண்ட் காலனி, கே.என்.புதூர், எஸ்.காந்திநகர் ஆகிய ஊர்களைச் சேர்ந்த 500-க்கும் கூடுதலான கிராமங்களைச் சேர்ந்த மக்கள் விவசாயம் செய்தும், வீடு கட்டி குடியிருந்தும் வருகின்றனர். ஆனால், திடீரென எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல், அந்த நிலங்களை அளவீடு செய்து, கையகப்படுத்தும் நடவடிக்கைகளில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அதைக் கண்டித்து 5 ஊர் மக்களும் கடந்த மாதம் 11-ந்தேதி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் போராட்டம் நடத்தியும் பயனில்லை. நிலங்களை அளவிட்டு, தங்கள் கட்டுப்பாட்டில் எடுக்கும் பணியில் அரசு தீவிரம் காட்டி வருகிறது.
வருவாய்த்துறையினரின் நடவடிக்கை சிறிதும் ஏற்றுக்கொள்ள முடியாது; சட்டத்திற்கும், நியாயத்திற்கும் முற்றிலும் எதிரானது ஆகும். உண்மையில் அந்த நிலம் 5 கிராம மக்களுக்கு சொந்த மானது ஆகும். அவர்களின் முன்னோர்கள் தான் 1938-ம் ஆண்டில் நில குடியேற்றக் கூட்டுறவு சங்கத்தை தொடங்கி நடத்தினார்கள். இப்போது வருவாய்த்துறையினரால் அளவிடப்படும் 382 ஏக்கர் நிலங்களும் நிலக் குடியேற்ற சங்கத்திற்கு சொந்தமானதாகும். சங்க உறுப்பினர்கள் 474 பேர் அந்த நிலத்தில் விவசாயம் செய்தும், வீடுகளை கட்டியும் வாழ்ந்து வந்தனர். அந்நிலங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை தான் இப்போது 500-க்கும் கூடுதலாக அதிகரித்துள்ளது. நிலங்களின் மீதான அவர்களின் உரிமையும் தொடர்கிறது.
நிலங்களை நிர்வகித்து வந்த நில குடியேற்றக் கூட்டுறவு சங்கம் தவிர்க்க முடியாத காரணங்களால் 1986-ம் ஆண்டில் கலைக்கப்பட்டது.
கூட்டுறவு சங்கம் கலைக்கப்பட்ட போதே, அதன் நிலங்களை, அவற்றை பயன்படுத்தியவர்களுக்கே பட்டா செய்து கொடுத்திருந்தால் இந்த சிக்கல் வந்திருக்காது. அதிகாரிகள் நிலையில் இழைக்கப்பட்ட தவறுக்கு அப்பாவி பொது மக்களை பலிகடா ஆக்கக்கூடாது. அவர்களுக்கு அந்த நிலங்களைத் தவிர வேறு வாழ்வாதாரமும், வாழ்விடமும் கிடையாது.
கணவாய்ப்புதூர் பகுதியில் உள்ள 382 ஏக்கர் நிலங்களை அங்குள்ள மக்கள் பரம்பரை பரம்பரையாக 85 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தி வருகின்றனர். அந்த நிலத்தை அவர்கள் பெயருக்கு பட்டா செய்து கொடுக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதிகாரிகள் சிலரின் தவறுகளால் அது செயல்படுத் தப்படவில்லை என்பதற்காக, 5 கிராம மக்கள் பயன்படுத்தி வரும் நிலங்களை பறிக்கக் கூடாது. அந்த நிலங்களை அளவிடும் பணிகளை உடனடியாக நிறுத்தி விட்டு, அந்த நிலங்களை அவற்றை பயன்படுத்தி வரும் மக்களுக்கு பட்டா செய்து வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.