உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

முறைகேடு புகார் கலெக்டர் அலுவலக அதிகாரிகளிடம் விசாரணை

Published On 2022-09-01 07:21 GMT   |   Update On 2022-09-01 07:21 GMT
  • பி.ஆர்.ஓ அலுவலக ஊழியர் செய்திதுறை இயக்குனர், செயலாளர், முதல்-அமைச்சர் தனிப்பிரிவு ஆகியோருக்கு ஒரு புகார் மனு அனுப்பினார்.
  • செய்தி மக்கள்தொடர்பு அலுவலகத்தில் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

திண்டுக்கல்:

திண்டுக்கல் பி.ஆர்.ஓ அலுவலகத்தில் புகைப்பட கலைஞராக இருப்பவர் ஈஸ்வரன். இவர் செய்திதுறை இயக்குனர், செயலாளர், முதல்-அமைச்சர் தனிப்பிரிவு ஆகியோருக்கு ஒரு புகார் மனு அனுப்பினார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது,

திண்டுக்கல் பி.ஆர்.ஓ அலுவலகத்தில் வத்தலக்குண்டுவை சேர்ந்த சீனிவாசன் என்பவர் செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக உள்ளார். இவரும் கணக்கர் செல்வநாயகியும் இணைந்து போலி பில் தயாரித்து புகைப்படம் எடுக்கும் கருவிக்கு உபகரணங்கள் வாங்கியதாக கணக்கு காட்டியுள்ளனர். மேலும் பல்வேறு முறைகேடுகளிலும் ஈடுபட்டுள்ளனர் என்று தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து மதுரை ஐகோர்ட்டு கிளையிலும் புகார் அளிக்கப்பட்டது. அரசு பணத்தை கையாடல் செய்ததாக புகார் எழுந்த நிலையில் இதுகுறித்து ஈஸ்வரன் தெரிவிக்கையில், செய்திமக்கள் தொடர்பு அலுவலகத்தில் ஒரு கணக்குநோட்டு மட்டும் பராமரிக்கப்படுகிறது.

கொரோனா சான்றிதழை தூக்கி எரிந்துவிட்டு தற்போது தெரியாது என்கின்றனர். மக்களின் வரிபணத்தை வீணடிக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ளேன். இதற்கு நல்ல தீர்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன் என்றார்.

இதனிடையே இன்று செய்தி மக்கள்தொடர்பு அலுவலகத்தில் இளையேந்திரன் தலைமையிலான அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது புகார் தெரிவிக்கப்பட்ட நபர்களை தவிர யாரையும் அறைக்குள் அனுமதிக்கவில்லை. அவர்களிடம் விசாரணை நடத்தியதை தொடர்ந்து ஆவணங்களும் சோதனை செய்யப்பட்டன. இதன்பின்பு அதிகாரிகள் மீது நடவடிக்கை குறித்து தெரிவிக்கப்படும்.

Tags:    

Similar News