திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலுக்கு சிறப்பு வார்டு
- அரசு ஆஸ்பத்திரிக்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற வருவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
- டெங்கு மற்றும் காய்ச்சலுக்கான ரத்த பரிசோதனை செய்யப்படுகிறது.
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டத்தில் தற்போது காய்ச்சல் பாதிப்பு அதிகமாக பரவி வருகிறது. சளி, இருமல், மற்றும் உடல் வலியால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். டெங்கு காய்ச்சல் பாதிப்பும் ஏற்பட்டு வருவதால் சுகாதார நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற வருவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் 70 படுக்கை வசதி கொண்ட தனி சிகிச்சை பிரிவு திறக்கப்பட்டு உள்ளது.
இதுவரை 6 பேர் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். டெங்கு காய்ச்சல் மேலும் பரவ வாய்ப்பு உள்ளதால் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக தனி சிகிச்சை வார்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. தற்போது டெங்கு காய்ச்சலால் ஒரு சிறுமி மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் டெங்கு அறிகுறிகளோடு 37 பேர் சேர்க்கப்பட்டு உள்ளனர். அவர்களது ரத்த மாதிரி பரிசோதனை அனுப்பப்பட்டு உள்ளது. அவர்களது உடல்நிலையை டாக்டர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.
இதுகுறித்து, திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் திலகவதி கூறியதாவது:-
திருவள்ளூர் மாவட்டத்தில் தற்போது, டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறைவாக இருந்தாலும், அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதால், 70 படுக்கை வசதி கொண்ட தனி சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் காய்ச்சல் பாதிப்பு இருந்தால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவ மனைக்கு சென்று உரிய சிகிச்சை பெற வேண்டும். ஓரிரு நாட்களில் காய்ச்சல் குணமாவிட்டாலும், பசி இன்மை, குமட்டல், வாந்தி, உடல்சோர்வு, குறைந்த அளவு சிறுநீர் வெளியேறுதல், வாய், பல் ஈறு மற்றும் மூக்கில் இருந்து ரத்த கசிவு, வயிற்று வலி, மூச்சு விட சிரமம், மலம் கருப்பாக வெளியேறுதல், மயக்கம் ஏற்படுதல் என, இவற்றில் ஏதாவது ஒரு அறிகுறி இருந்தால், உடனடியாக அரசு மருத்துவ மனைக்கு வரவும்.
இங்கு, டெங்கு மற்றும் காய்ச்சலுக்கான ரத்த பரிசோதனை செய்யப்படுகிறது. திருவள்ளூர் அரசு மருத்து வக்கல்லுாரி மருத்துவமனையில், டெங்கு மற்றும் காய்ச்சலை குணப்படுத்த தேவையான மருந்து, நரம்பு வழி வாயிலாக செலுத்தப்படும் மருந்து, திரவம், நிலவேம்பு கசாயம், ரத்த தட்டணுக்கள் குறைவை சரிசெய்ய, 24 மணி நேரமும் சிறப்பு பிரிவு இயங்கும். எந்த நேரத்திலும், டெங்கு பாதிக்கப்பட்டோர் மருத்துவமனையை அணுகலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.