உள்ளூர் செய்திகள்

பொள்ளாச்சியில் கோவில் மண்டபத்தில் மது குடித்ததை தட்டிக்கேட்டவர் அடித்துக்கொலை

Published On 2022-09-04 09:20 GMT   |   Update On 2022-09-04 09:20 GMT
  • கடந்த 5 வருடங்களாக உடல் நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்தார்.
  • ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

கோவை, -

பொள்ளாச்சி அடுத்த கோட்டூர் மலை யாண்டிப்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் சோமசுந்தரம் (வயது 40). தொழிலாளி. இந்தநிலையில் இவர் கடந்த 5 வருடங்களாக உடல் நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்தார். இதனால் அவர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார்.

சோமசுந்தரம் எப்போதும் வீட்டின் அருகே உள்ள பகவதியம்மன் கோவில் மண்டபத்திற்கு சென்று தூங்குவது வழக்கம். சம்பவத்தன்று சோமசுந்தரம் வழக்கம்போல தூங்குவதற்கு மண்டபத்திற்கு சென்றார். அங்கு தனது நண்பர் பூபதி என்பவருடன் பேசி கொண்டு படுத்திருந்தார்.

அப்போது வாலிபர் ஒருவர் அங்கு மதுபாட்டிலுடன் வந்தார். பின்னர் மண்டபத்தில் அமர்ந்து மதுகுடித்தார். இதனை பார்த்த சோமசுந்தரம் அந்த வாலிபரிடம் கோவில் மண்டபத்தில் மதுகுடிக்க கூடாது என கண்டித்தார்.

கொலை வழக்கு

இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது. ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் அவரை தகாத வார்த்தைகளால் திட்டி அங்கிருந்த கல்லை எடுத்து சோமசுந்தரத்தின் தலையில் தாக்கினார். பலத்த காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து விழுந்தார். அவரின் அலறல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். பின்னர் அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.இதுகுறித்து கோட்டூர் போலீசார் அடிதடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சூளேஸ்வரன்பட்டியை சேர்ந்த ராம்குமார் (29) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் சோமசுந்தரம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து போலீசார் அடிதடி வழக்கை கொலை வழக்காக மாற்றி தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News