உள்ளூர் செய்திகள்

அசோக் நகரில் மருத்துவ உபகரணம் விற்பனை செய்யும் நிலையத்தில் தீ விபத்து

Published On 2022-10-25 14:29 IST   |   Update On 2022-10-25 14:29:00 IST
  • தீபாவளி பண்டிகை காரணமாக இந்த நிறுவனங்களுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டு இருக்கிறது.
  • போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போரூர்:

சென்னை, அசோக் நகர் 2-வது அவின்யூவில் உள்ள ஒரே கட்டிடத்தில் தரை தளம் மற்றும் முதல் தளத்தில் மருத்துவ உபகரணங்கள் விற்பனை செய்யும் 2 தனியார் நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது.

தீபாவளி பண்டிகை காரணமாக இந்த நிறுவனங்களுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் நேற்று காலை 8.30 மணி அளவில் கீழ் தளத்தில் இருந்து கரும்புகை கிளம்பியது சிறிது நேரத்தில் தீப்பிடித்து மள மளவென எரிய தொடங்கியது.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் அசோக் நகர் போலீசுக்கும் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர்.

காற்றின் வேகம் காரணமாக அருகில் இருந்த அடுக்குமாடி குடியிருப்பிற்கும் தீ பரவியது இதனால் அதிர்ச்சி அடைந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த சிலர் அலறி அடித்து வெளியே ஓட்டம் பிடித்தனர்.

அசோக் நகர், விருகம்பாக்கம் ஆகிய இடங்களில் இருந்து 5 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 10 டேங்கர் லாரிகள் மூலம் கொண்டு வரப்பட்ட தண்ணீரை கொண்டு மாவட்ட தீயணைப்பு அதிகாரி ராபின் கேஸ்ரோ தலைமையில் 30-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் 2 நிறுவனங்களில் ரூ.1 கோடி மதிப்புள்ள மருத்துவ உபகரண பொருட்கள், 2 மினி வேன்கள் உட்பட 3 வாகனங்கள் ஆகியவை தீயில் கருகி நாசம் ஆனது.

மின்கசிவு காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டதா? அல்லது பட்டாசு பொறி ஏதாவது பறந்து விழுந்து தீவிபத்து நடந்ததா என்று அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குன்றத்தூர் அடுத்த கோவூர் பகுதியை சேர்ந்தவர் சுந்தர். இவர் அதே பகுதியில் பூ தொட்டிகளுக்கு நார் மற்றும் உரம் விற்பனை செய்யும் குடோன் வைத்து நடத்தி வந்தார். தீபாவளி பண்டிகை என்பதால் குடோனை பூட்டி விட்டு சென்று விட்டார். நேற்று காலை குடோன் திடீரென தீப்பற்றி எரிந்தது. தகவல் அறிந்ததும் பூந்தமல்லி, விருகம்பாக்கம், அம்பத்தூர் ஆகிய பகுதியில் இருந்து 4 தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் குடோனில் இருந்த நார்கள், உரம் மற்றும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 மோட்டார் சைக்கிள்கள், ஒரு கார் ஆகியவை தீயில் எரிந்து நாசமானது. சேத மதிப்பு ரூ.20 லட்சம் இருக்கும். பட்டாசு வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டதா அல்லது மின் கசிவு காரணமா என்று மாங்காடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திருத்தணியில் பட்டாசு வெடித்த போது ஏற்பட்ட தீ விபத்தில் மொட்டை மாடியில் அமைக்கப்பட்ட குடிசை எரிந்த சேதம் அடைந்தது. அங்கிருந்த லட்சம் மதிப்பிலான பூக்களால் உருவாக்கப்பட்ட அலங்காரப் பொருட்கள் எரிந்து சேதமானது.

திருவள்ளூர் உழவர் சந்தை அருகே செயல்பட்டு வரும் வங்கியில் நேற்று காலை தீ விபத்து ஏற்பட்டது. இதில் முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசமானது.

Similar News