உள்ளூர் செய்திகள்

நிலக்கோட்டை பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள செவ்வந்தி பூக்கள்.

நிலக்கோட்டையில் அடைமழையால் பூக்கள் சாகுபடி கடுமையாக பாதிப்பு

Published On 2023-11-06 09:54 IST   |   Update On 2023-11-06 09:54:00 IST
  • ஐப்பசி மாதம் முகூர்த்த தினங்கள், திருவிழாக்கள் குறைவாக இருப்பதால் பூக்கள் விலை கடுமையாக சரிந்துள்ளது.
  • இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் அடைமழையால் பூக்கள் சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

நிலக்கோட்டை:

தென்தமிழகத்தின் பிரசித்தி பெற்ற மாாக்கெட்டாக நிலக்கோட்டை பூ மார்க்கெட் விளங்கி வருகிறது. உலக அளவில் பிரபலமாக உள்ள மதுரை மல்லி இப்பகுதியில் தான் விளைவிக்கப்படுகிறது.

மேலும் நிலக்கோட்டை சுற்று வட்டார பகுதிகளான என்.ஆண்டிபட்டி, மிளகாய்பட்டி, சீத்தாபுரம், குளத்துப்பட்டி, ஊத்துப்பட்டி, புதூர், பிள்ளையார்நத்தம், சிலுக்குவார்பட்டி, மைக்கேல்பாளையம், கோட்டூர், தொட்டாம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் வாடாமல்லி, கனகாம்பரம், காக்கரட்டான், கலர்பிச்சி, வெள்ளை பிச்சி, மரிக்கொழுந்து உள்பட பல்வேறு வகையான மலர்கள் சாகுபடி செய்யப்படுகிறது.

தற்போது இப்பகுதியில் அதிக அளவு செவ்வந்தி பூக்களை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். பூக்கள் பூத்துக்குலுங்கி அறுவடைக்கு தயாரான நிலையில் உள்ளது. இந்த பூக்கள் மதுரை, சென்னை, மும்பை உள்பட பல்வேறு நகரங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

ஐப்பசி மாதம் முகூர்த்த தினங்கள், திருவிழாக்கள் குறைவாக இருப்பதால் பூக்கள் விலை கடுமையாக சரிந்துள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் அடைமழையால் பூக்கள் சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வியாபாரிகள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். மிகவும் எதிர்பார்த்த பூக்களுக்கு விலை கிடைக்காத நிலையில் சாகுபடியும் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.

Tags:    

Similar News