உள்ளூர் செய்திகள்

ஊட்டியில் மரபியல் பயிர்கள் கண்காட்சி - விவசாயிகள் மேளா

Published On 2022-10-21 14:28 IST   |   Update On 2022-10-21 14:28:00 IST
  • மரபியல் பல்வகைமை கண்காட்சி விவசாயிகள் மேளாவினை கலெக்டர் அம்ரித் குத்துவிளக்கேற்றி ெதாடங்கி வைத்தார்.
  • நீலகிரி மாவட்டத்தில் 200 வகையான மருத்துவ பயிர்கள் உள்ளன.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம், ஊட்டி சேரிங்கிராஸ் தோட்டக்கலைத்துறை வளாகத்தில், தோட்டக்க லைத்துறை சார்பில், மரபியல் பல்வகைமை கண்காட்சி விவசாயிகள் மேளாவினை கலெக்டர் அம்ரித் குத்துவிளக்கேற்றி ெதாடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:தமிழகம் முழுவதும் பாரம்பரியப் பயிர்களை மீட்டெடுக்கும் முயற்சியாக முன்னோர் செய்த இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில், மரபியல் பல்வகைமை கண்காட்சி விவசாயிகள் மேளா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் இன்றைய தினம் மாவட்ட அளவில் அட்மா திட்டத்தின் கீழ் மரபியல் பல்வகைமை என்ற தலைப்பில் கிசான் மேளா மற்றும் பாரதிய பிரகிருதிக் கிரிஷி பத்தாதி) திட்டத்தின் கீழ் மூலிகை பூச்சி விரட்டி மற்றும் திரவ ஊட்டச்சத்து தயாரிப்பு பற்றிய செயல்விளக்கம் மற்றும், இயற்கை விவசாய முறைகளை பின்பற்றி பாரம்பரிய ரகங்களை பயிரிடுவது குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

நீலகிரி மாவட்டத்தில் பாரம்பரிய வகை காய்கறிகள், பழங்கள், மருத்துவ தாவரங்கள், பூக்கள் மற்றும் மசாலாப் பொருட்களை பூர்வீகமாக கொண்டு அதிலிருந்து மேம்படுத்தப்பட்ட ரகங்கள் உருவாக்கப்படுகின்றன. மேலும், நீலகிரி மாவட்டத்தில் 200 வகையான மருத்துவ பயிர்கள், 175 வகையான ஆர்கிட் மலர்கள், 75 வகையான பூக்கும் மரங்கள் உட்பட 3,700 வகையான தாவரங்கள் நிறைந்த உயர்கோளம் ஆகும்.

பாரம்பரிய மருத்துவ செடிகள், சிறுதானியங்கள், பயறு வகைகள் அதிக அளவில் பயிரிடப்பட்டு வந்தன. பிற்காலத்தில் தோட்டப்பயிர்கள் மற்றும் வீரியரக காய்கறி பயிர்கள் அதிக அளவில் பயிரிடப்பட்டதின் விளைவாக நீலகிரி மாவட்டத்தின் சிறப்பு மிக்க பாரம்பரிய பயிர்கள் அழியும் நிலையில் உள்ளன. இதனை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கில் அரசு இது போன்ற திட்டங்களை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.மேலும், தோட்டக்கலைத்துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் என்னென்ன என்பதனை விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்க வேண்டும்.

விவசாயிகள் பயிரிடும் பயிர்களை அதிக லாபத்திற்கு விற்பதற்காக வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை அலுவலர்கள் தேவையான ஆலோசனைகளை வழங்க வேண்டும். இந்த மரபணு கண்காட்சியினை மாவட்டம் முழுவதிலும் இருந்து 180 விவசாயிகளும், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தை சேர்ந்த 60 மாணவர்களும் கண்டு களிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்ப ட்டுள்ளது. மூலிகை பூச்சி விரட்டி மற்றும் திரவ ஊட்டச்சது குறித்த செயல் விளக்க மேளாவில் 31 கிராமங்கள் மற்றும் மாநில தோட்டக்கலை பண்ணை களிலிருந்து 466 விவசாயிகளும் கலந்து கொண்டனர்.

இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்துவதன் மூலம் விவசாயிகளுக்கும், மாணவ, மாணவிகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே விவசாயிகள் மண்ணிற்கு ஏற்ற பயிர்களை அதிக அளவில் விளைவித்து அனைவரும் பயன் பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். அதனை தொடர்ந்து, பாரம்பரிய மூலிகை மருத்துவம் தேசிய அளவிலான தன்வந்திரி சான்றிதழ் பெற்ற காளியம்மாள் என்பவர் மாவட்ட கலெக்டரிடம் சான்றிதழை காண்பித்து வாழ்த்துப் பெற்றார்.

நிகழ்ச்சியில் தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் (பொ) ஷிபிலா மேரி, துணை இயக்குநர் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை ஜாயிலின் ஷோபியா, ஊட்டி தாசில்தார் ராஜசேகர் மற்றும் விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News