உள்ளூர் செய்திகள்

காஞ்சிபுரத்தில் 7 பேரை அரிவாளால் வெட்டி கஞ்சா கும்பல் ரகளை

Published On 2022-12-22 14:30 IST   |   Update On 2022-12-22 14:30:00 IST
  • கஞ்சா கும்பல் தாக்கியதால் பல கடைகள் சேதம் அடைந்தன.
  • கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் குற்றச்சம்பவங்களை தடுக்க போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம், குள்ளப்பன் தெருவில் விமல் என்பவர் வீட்டின் அருகே சிறிய பெட்டி கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு கடைக்கு கஞ்சா போதையில் வந்த வாலிபர்கள் சிலர் ரகளையில் ஈடுபட்டனர். அவர்கள் பட்டாக்கத்தியை காட்டி மிரட்டி கடையில் இருந்த பணம் மற்றும் செல்போனை பறித்து தப்பி சென்றனர். கடையையும் நொறுக்கி சேதப்படுத்தினர்.

மேலும் அந்த போதை கும்பல் சுண்ணாம்புக்கார தெரு, அமுது படி சாலை, தேனம்பாக்கம் சாலை வழியாக சென்றபோது அங்கு வந்த பொதுமக்களை மிரட்டி பணம், செல்போனை பறித்தனர். பணம் கொடுக்க மறுத்தவர்களை பட்டாக்கத்தியால் காட்டி மிரட்டி வெட்டினர்.

இதில் ஆனைகட்டி தெருவை சேர்ந்த சகோதரர்கள் சுரேஷ் மற்றும் ஆனந்தன், சேஷாத்திரி பாளையம் பகுதியை சேர்ந்த சதீஷ் டோல்கேட் பகுதியை சேர்ந்த சீனு மற்றும் வீரராகவன் திருக்காலிமேடு பகுதியை சேர்ந்த தயாளன் சுண்ணாம்பு கார தெருவை சேர்ந்த சதீஷ் உள்ளிட்ட 7 பேருக்கு வெட்டு விழுந்தது.

அவர்கள் காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

மேலும் கஞ்சா கும்பல் தாக்கியதால் பல கடைகள் சேதம் அடைந்தன. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி அறிந்ததும் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி விசாரித்தனர். இந்த தாக்குதல் தொடர்பாக 2 பேரை போலீசார் பிடித்து உள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, போதையில் வந்த வாலிபர்கள் பொதுமக்களிடம் செல்போன் மற்றும் பணம் கேட்டு மிரட்டினர். மேலும் பட்டா கத்தியால் வெட்டினர். பல கடைகளும் தாக்கப்பட்டது. கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் குற்றச்சம்பவங்களை தடுக்க போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ள இது போன்ற கும்பலை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்றனர்.

Tags:    

Similar News