உள்ளூர் செய்திகள்

தென்காசி கலெக்டர் அலுவலகத்திற்கு புகார் மனு அளிக்க வந்த விவசாயிகளை படத்தில் காணலாம்.

சங்கரன்கோவில் அருகே தொடக்க கூட்டுறவு சங்கத்தில் பல கோடி ரூபாய் மோசடி - கலெக்டரிடம் விவசாயிகள் மனு

Published On 2022-06-29 09:12 GMT   |   Update On 2022-06-29 09:12 GMT
  • விவசாயிகளின் பெயரில் கடன் பெற்று அதனையும் ஏமாற்றி வருகிறார். என்று மனுவில் கூறியுள்ளனர்.
  • கலெக்டர் ஆய்வு செய்து மோசடிகளில் தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.

தென்காசி:

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா ரெட்டியப்பட்டி பகுதியை சேர்ந்த சுந்தரராஜன் தலைமையில் அந்தப் பகுதியை சார்ந்த விவசாயிகள் மாவட்ட கலெக்டரை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளனர்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

ரெட்டியபட்டி கிராமத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஒருவர் தொடர்ந்து செயலாளராக பணிபுரிந்து வருகிறார்.

இவர் இந்தக் கூட்டுறவு சங்கத்தின் மூலம் விவசாய பயிர் கடன் மற்றும் நகை கடன் மூலம் பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளார்.

மேலும் விவசாய பயிர் கடன் என்ற பெயரில் எங்கள் பகுதியில் வாழை பயிர் செய்துள்ளதாக கூறி சுமார் 98 க்கும் மேற்பட்ட விவசாயிகளின் பெயரில் கடன் பெற்று அதனையும் ஏமாற்றி வருகிறார்.

ரெட்டியபட்டி கிராமம் வானம் பார்த்த பூமியாகும். இங்கு பெய்து வரும் மழையை மட்டுமே நம்பி இங்குள்ள விவசாயிகள் பயிர் செய்து வருகின்றனர். இது வரை இந்தப் பகுதியில் எந்த விவசாயியும் வாழை பயிரிட்டது கிடையாது. அந்த அளவுக்கு இந்தப் பகுதியில் தண்ணீர் கிடையாது.

ஆனால் எங்கள் பகுதியில் 98 விவசாயிகள் வாழை பயிர் செய்துள்ளதாக போலியான ஆவணங்களை தயார் செய்து அவர்களுக்கே தெரியாமல் அவர்கள் பெயரில் பல கோடி ரூபாய் கடன் பெற்று பிறகு அந்தக் கடனையும் அரசு தள்ளுபடி செய்து விட்டதாக கூறி எடுத்துக்கொண்ட சம்பவமும் இந்த பகுதியில் நடந்து உள்ளது.

இதுபற்றி பலமுறை கூட்டுறவுத்துறை அதிகாரிகள் முதல் கூட்டுறவு துறை அமைச்சர், தமிழக முதல்-அமைச்சர் தனிப்பிரிவு வரை பல்வேறு புகார்களை பல்வேறு தரப்பினர் வழங்கியும் இன்றுவரை சம்பந்தப்பட்டவர் மீது எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப் படவில்லை.

எனவே தென்காசி மாவட்ட கலெக்டர் உடனடியாக இந்தப் பிரச்சனையில் தலையிட்டு மோசடிகளை ஆய்வு செய்து அதில் தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் அந்த கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News